குஜராத் போலீஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ.. தொழிலாளர்களிடம் வாங்கினார்களா ?

பரவிய செய்தி
கால்நடையாக நடந்த தனது சொந்த ஊருக்குச் செல்லும் பெண்களிடம் லஞ்ச வேட்டை நடத்தும் குஜராத் ரயில்வே போலீஸ்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்வதால் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வவும் செய்கிறார்கள். அப்படி செல்லும் தொழிலாளர்களிடம் குஜராத் போலீஸ் லஞ்சம் பெறுவதாக வைரலாகும் வீடியோ சமூக வலைதளத்தில் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
மே 10-ம் தேதி வின்சன்ட் ராஜா என்பவரின் முகநூல் பக்கத்தில், ” கால்நடையாக நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் பெண்களிடம் லஞ்ச வேட்டை நடத்தும் குஜராத் போலீஸ் ” என்ற வாசகத்துடன் வெளியான வீடியோ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவில், ரயில் பாதையில் தலையில் மற்றும் கையில் பைகளுடன் நடந்து வரும் ஒவ்வொரு பெண்களிடம் ரயில்வே காவலர் ஒருவர் பணம் பெறுகிறார். பணம் பெறுவதில் வாக்குவாதம் கூட நிகழ்கிறது. இவ்வீடியோ பிற முகநூல் பக்கங்களிலும் பகிரப்பட்டு அம்மாநில அரசின் மீது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வீடியோ உடன் இணைக்கப்பட்ட கூற்றில் இடம்பெற்ற வார்த்தைகளை கீ வேர்ட்ஸ் ஆகப் பயன்படுத்தி வீடியோ குறித்து தேடிப் பார்த்தோம். ” Gujarat railway police taking money ” என்கிற கீ வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய பொழுது சில வீடியோக்கள் கிடைத்தன. அதில், வைரலாகும் வீடியோ தொடர்பான வெளியான செய்தியும் கிடைத்தது.
2019 ஜூலை 11-ம் தேதி ABP Asmita என்கிற யூடியூப் சேனல் செய்தியில், சூரத் ரயில்வே போலீஸ் கள்ளத்தனமாக மதுக்கடத்தலில் ஈடுபடும் பெண்களிடம் இருந்து பணத்தை பெறுவதாக வைரலாகும் வீடியோ வெளியாகி இருக்கிறது. குஜராத்தில் மதுவிலக்கு உள்ளதால் கள்ளத்தனமாக முறையில் மது விற்பனை நிகழ்கிறது. அப்படி கள்ளத்தனமாக மதுக்களைக் கொண்டு செல்லும் பெண்களிடம் ரயில்வே காவலர் லஞ்சம் பெறுவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
மேலும் தேடிய பொழுது, 2019 ஜூலை 13-ம் தேதி Desh Gujarat ட்விட்டர் பக்கத்திலும் அதே தகவலுடன் வீடியோ வெளியாகி இருக்கிறது. Desh Gujarat மற்றும் mumbai mirror இணையதளங்களில் லஞ்சம் பெற்ற ரயில்வே காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, கொரோனா ஊரடங்கில் சொந்த ஊருக்கு செல்லும் பெண்களிடம் குஜராத் ரயில்வே போலீஸ் லஞ்சம் பெறுவதாக வைரலாகும் வீடியோ தவறானது. கடந்த ஆண்டு சூரத்தில் கள்ளத்தனமாக மதுபானக் கடத்தல் செய்யும் பெண்களிடம் லஞ்சம் பெற்ற ரயில்வே காவலரின் வீடியோ தவறாக வைரல் செய்யப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.