போலியோ தடுப்பு மருந்தை கண்டுபித்த ஜோனஸ் சால்க் பற்றி அறிவோம் !

பரவிய செய்தி
போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் குழந்தைகளுக்கு அது இலவசமாக கிடைக்க வேண்டும் என்று அதற்குரிய பேட்டண்ட் எனக்கு வேண்டாம் என சொல்லி விட்டார். அவர் இழந்தது 700 கோடி டாலர் (45000 கோடி ரூபாய்) . மனிதகுல நன்மைக்காக பெருங்கொடையளித்த கொடையாளி.
மதிப்பீடு
விளக்கம்
போலியோ என பொதுவாக அழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம் நோயால் உலக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏராளமாக இருந்தனர். போலியோ வைரஸ் மூலம் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் உள்ளிட்ட பிரதான உறுப்புகள் தாக்கப்படுகிறது. நரம்புகளில் ஏற்படும் பாதிப்பினால் கை, கால்கள் வளர்ச்சி இன்றி வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு போலியோ இல்லாத உலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். இன்று பெருமளவு போலியோ பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனவரி 19-ம் தேதி முதல் தமிழகத்தில் போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டு 5 வயது குழந்தைகள் வரை இலவசமாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
போலியோ தடுப்பு மருந்தை கண்டுபித்து உலக முழுவதும் போலியோ வைரஸ் பாதிப்பு குறைய வழிவகை செய்தவர் ஜோன்ஸ் சால்க். 1914-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்த ஜோனஸ் சால்க் முதலில் சட்டம் பயில விரும்பினாலும் பிறகு மருத்துவம் பயின்றார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வைரஸ் குறித்த ஆய்வுகள் அதிகரிக்கத் தொடங்கின. அச்சமயத்தில் சால்க் வைரஸ்களை அழிக்காமல் அவற்றை செயலிழக்க வைத்து அதன் மூலம் அவற்றை நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்தும் முயற்சியில் ஆய்வுகளை செய்து கொண்டு இருந்தார்.
1947-ல் பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குனராக சால்க் இருந்தார். சால்க் மற்றும் அவருடன் குழுவினரின் ஏழு வருட உழைப்பால் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1955-ல் ஜோன்ஸ் சால்க் உடைய போலியோ தடுப்பு மருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் போலியோ தடுப்பு மருந்து கண்டுபிக்கப்பட்ட ஆண்டில் 45,000 பேர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்படுபவர்கள் 910 ஆக குறைந்தனர்.
ஜோன்ஸ் சால்க் போலியோவிற்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தினை போன்றே ஆல்பர்ட் சபின் என்பவரும் 1956-ல் வாய்வழி மருந்தாக போலியோ தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தார். அந்த தடுப்பு மருந்து மிக செயல்திறன் கொண்டதாக இருக்கும் என கூறினார். அது விவாதத்துக்குரியதாகவே அமைந்தது. எனினும், ஜோன்ஸ் சால்க் மற்றும் ஆல்பர்ட் சபின் ஆகிய இருவருமே போலியோ தடுப்பு மருந்திற்கான காப்புரிமையை பெறவில்லை.
காப்புரிமை தொடர்பாக சால்க் அளித்த வித்தியாசமான பதில் அவரை இன்றுவரை நினைவுக்கூறும் விதத்தில் அமைந்து இருக்கிறது. அவரைச் சுற்றியுள்ள பலரும் போலியோ தடுப்பு மருந்திற்கு காப்புரிமை பெற அறிவுறுத்தி வந்தனர். அதற்கு ” சூரியனுக்கு உங்களால் காப்புரிமை பெறமுடியுமா ?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார். தனது கண்டுபிடிப்பை சூரியனுடன் ஒப்பிட்டு அனைவரும் பயன்தரக்கூடியது எனக் கருதினார்.
2012-ம் ஆண்டில் போர்ப்ஸ் செய்தியின் இணையதளத்தில் ” How Much Money Did Jonas Salk Potentially Forfeit By Not Patenting The Polio Vaccine? ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், போலியோ தடுப்பு மருந்திற்கு காப்புரிமை பெறாமல் எவ்வளவு தொகையை ஜோன்ஸ் சால்க் விட்டுக் கொடுத்தார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் 7 பில்லியன் டாலர்கள் எனக் குறிப்பிட்டு உள்ளனர். இதனை தோராயமான கணக்கீடாகவே பார்க்க வேண்டும்.
எனினும், போலியோ தடுப்பு மருந்திற்கு காப்புரிமை பெற்று இருந்தால் பல கோடி டாலர்களை ஜோன்ஸ் சால்க் பெற்றுக்கூடும் என்கிறார்கள். தற்பொழுது தடுப்பூசி குறித்த தவறான செய்திகளும் பரப்பப்படுவதை பார்க்கலாம். ஆனால் போலியோ தடுப்பூசியால் மனிதகுலம் பயனடைந்ததை யாராலும் மறுக்கவே முடியாது.