காங்கிரஸ், திமுகவின் கருப்பு பணம் குறித்து விக்கி லீக்ஸ் வெளியிட்ட ஆதாரம் எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
இந்தியாவின் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதி கட்சி, திமுக ஸ்டாலின் போன்றோர் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சூமார் 5 லட்சம் கோடி. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்த பணம் அனைத்தும் செல்லாக்காசாகி விட்டது. ஆதாரத்துடன் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாங்கே.
மதிப்பீடு
விளக்கம்
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கருப்புப்பணம் மீட்பது குறித்த வாக்குறுதிகள் பாஜகவின் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. பிரதமர் மோடி 2016ம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையாகவே கூறப்பட்டது.
ஆனால், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 99.30 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பியதாக இந்திய ரிசர்வ வங்கி அறிக்கையில் கூறியது.
இந்நிலையில், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி (மாயாவதி கட்சி) மற்றும் திமுக ஸ்டாலின் போன்றோர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் செல்லாக் காசாகிவிட்டதாக விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே ஆதாரம் வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்குபவர்கள் இந்திய ரூபாய் நோட்டுகளையா பதுக்குவார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. விக்கி லீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். ஜூலியன் அசாங்கே அப்படி எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. மேற்கொண்டு தேடியதில், 2011ம் ஆண்டு ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு’ நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் எதிர் காலத்தில் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார். ஆனால், அப்படி எந்த பட்டியலையும் அவர் வெளியிட்டதாகச் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
சர்வதேச நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டில் பிற நாட்டினர் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் பற்றிய விவரம் அந்தந்த நாடுகளிடம் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி முதன் முதலில் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா உட்பட 75 நாடுகளைச் சார்ந்த 31 லட்ச வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு நிதி கணக்குகள், தகவல்களை சுவிட்சர்லாந்து வரிகள் நிர்வாக அமைப்பு பகிர்ந்துள்ளது. இந்த தகவல்கள் பரிமாற்ற விவரங்கள் முழுமையாக ரகசியமானவை” எனத் தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு விவரங்கள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரையில் 4 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியல்களில் யார் யார் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேபோல், கருப்பு பணம் பதுக்கி உள்ள இந்தியர்களின் பட்டியலை விக்கி லீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் தகவலை மறுத்து 2011ல் விக்கி லீக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
WARNING: WikiLeaks and Indian black money: The following is a FAKE image and never appeared on WikiLeaks http://t.co/Dwbpc3P
— WikiLeaks (@wikileaks) August 5, 2011
இவற்றிலிருந்து இத்தகவல் எதிர்க்கட்சிகள் குறித்து, வலதுசாரி ஆதரவாளர்கள் பரப்பிய போலிச் செய்தி என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தற்போது பரவிய செய்தி போல 2021ம் ஆண்டும் விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல் என சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில், “இந்தியாவிலிருந்து பதுக்கப்பட்ட கருப்புப் பணம் எழுபத்து இரண்டு இலட்சம் கோடி.. அதில் பா.ஜ.க மற்றும் பா.ஜ.க ஆதரவு பெற்ற தொழிலதிபர்களின் பணம் மட்டுமே நாற்பது இலட்சம் கோடி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.
முடிவு :
நம் தேடலில், விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இந்திய அரசியல் கட்சிகளின் கருப்புப் பணம் குறித்து வெளியிட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.