1988 முதல் இன்று வரை உள்ள பிஜேபி, காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பட்டியல் !

பரவிய செய்தி
1988 முதல் இன்று வரை உள்ள கட்சி தலைவர்களின் பட்டியல். இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் எது குடும்ப ஆட்சி, எது ஜனநாயக ஆட்சி.
மதிப்பீடு
விளக்கம்
கட்சியின் தலைமையோ அல்லது சிறிய பதவியோ என எதுவாக இருந்தாலும் இந்திய அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. மன்னர் ஆட்சியில் அரசருக்கு பிறகு அவரது மகன் என்பது போன்று உயர் அரசியல் பதவியில் இருப்பவர்கள் தங்களின் பிள்ளைகளை, குடும்ப உறுப்பினர்களை அடுத்த அரசியல் வாரியாக அறிமுகம் செய்து விட்டே செல்கின்றனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான முகநூல் பதிவு ஒன்றில் ” 1988 முதல் இன்று வரை உள்ள கட்சி தலைவர்களின் பட்டியல் ” என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. இப்பதிவானது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க முயன்றோம்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் :
1980-ம் ஆண்டு துவங்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராக அடல் பிகாரி வாஜ்பாய் பதவியில் இருந்தார். 1980 முதல் 1986 வரையில் வாஜ்பாய் பிஜேபி தலைவராக பதவி வகித்தார்.
அதன் பிறகு 1986-1990ல் எல்.கே அத்வானி, 1990-92ல் முரளி மனோகர் ஜோஷி, 1992-98ல் மீண்டும் எல்.கே அத்வானி, 1998-2000ல் குஷாபு தாக்ரே, 2000-01ல் பங்காரு லக்ஷ்மன், 2001-2002ல் ஜன கிருஷ்ணமூர்த்தி, 2002-2004ல் வெங்கையா நாயுடு, 2004-05ல் எல்.கே அத்வானி, 2005-2009ல் ராஜ்நாத் சிங், 2009-2013ல் நிதின் கட்கரி, 2013-14ல் ராஜ்நாத் சிங், 2014-2019ல் அமித்ஷா தலைவராக பொறுப்பில் இருந்துள்ளனர்.
2019 பொதுத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற பிறகு அக்கட்சியின் தலைவராக இருந்த அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு பிறகு தற்பொழுது ஜே.பி.நடா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பில் இருக்கிறார். பிஜேபி கட்சியில் அதிகமுறை தலைவராக இருந்த ஒரே நபர் எல்.கே.அத்வானி மட்டுமே.
பிஜேபியில் வாரிசு அரசியல் இல்லையென தவிர்த்து விட முடியாது. பிஜேபி கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுள்ளனர். உதாரணமாக, நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த வசுந்தரா ராஜீ-ன் மகன் துஷ்யந்த் சிங் மூன்றாம் முறையாக ஜஹல்வார்-பாரான் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோன்று நேரு குடும்பத்தைச் சேர்ந்த மேனகா காந்தி மற்றும் அவரின் மகன் வருண் காந்தி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் :
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் 1988-ல் இருந்தே சோனியா காந்தி இருந்து வருவதாக தவறாக குறிப்பிட்டு உள்ளனர். 1985 முதல் 1991 வரையில் ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பில் இருந்தார். அவருக்கு பிறகு 1992-96ல் நரசிம்ம ராவ், 1996-98-ல் சீதாராம் கேசரி தலைவர் பதவியில் இருந்துள்ளனர்.
அதன் பிறகு 1998-ல் இருந்து 2017 வரையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து பதவி வகித்தார். அவருக்கு பிறகு அவரின் மகன் ராகுல் காந்தி 2017 டிசம்பர் முதல் 2019 ஜூலை வரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தார். 2019 பொதுத்தேர்தல் தோல்வியால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்பொழுது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகிக்கிறார்.
திமுக கட்சித் தலைவர்கள் :
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களின் பட்டியல் மிகக் குறைவே. 1949 முதல் 1969 வரையில் திமுகவின் பொதுச்செயலாளராக சி.என் அண்ணாதுரை அவர்கள் தலைமை வகித்தார். 1969 முதல் 2018 வரையில் மு.கருணாநிதி தலைவராக இருந்தார். கருணாநிதியின் இறப்பிற்கு பிறகு 2018-ல் அவரின் மகன் மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவரானார்.
முடிவு :
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் பட்டியல் சரியான தகவலே. அவர்களின் பெயர்கள், அவர்கள் பதவியில் இருந்த ஆண்டுகள் விரிவாக குறிப்பிட்டு உள்ளோம்.
” 1998-ல் குஷாபு தாக்கரே பிஜேபி தலைவர் பதவியில் இருந்துள்ளார். அவரின் புகைப்படத்தில் இருந்தே மீம் பதிவில் தொடங்கி உள்ளனர். அதே ஆண்டில் தான் காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். 1998-க்கு பதிலாக 1988 என தவறாக பதிவிட்டு உள்ளனர் “.
இறக்கும் வரை கருணாநிதி திமுக கட்சியின் தலைவர் பதவியில் இருந்தார். அவருக்கு பிறகு அவரின் மகன் ஸ்டாலின். தற்பொழுது அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவர்.
சமீபத்தில் திமுகவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சென்றவர்களில் கனிமொழி, கதிர் ஆனந்த் உள்ளிட்ட பல அரசியல் வாரிசுகள் இடம்பெற்று உள்ளனர். அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி ஆகியுள்ளார்.
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் போன்றவை ஜனநாயகத்தை கேலிக்குள்ளாகிறது ! வாரிசுகளின் வரவு அடிமட்ட தொண்டனை கடைசி வரை தொண்டனாகவே இருக்கே வைக்கிறது.