அரசியல்வாதி யோகேந்திர யாதவ் தன் முஸ்லீம் பெயரை மறைத்து ஏமாற்றி வந்ததாக பொய் பரப்பும் வலதுசாரிகள் !

பரவிய செய்தி
இவரை “சலீம்” என்று யாருக்கும் தெரியாது. கடந்த 2 தசாப்தங்களாக இவரை யோகேந்திர யாதவ் என்று அறிந்து நாம் ஏமாந்து வருகிறோம்.Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் யோகேந்திர யாதவ். சலீம் என்பதுதான் அவரது உண்மையான பெயர் என மீடியான் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவணபிரசாத் பாலசுப்ரமணியன், பாஜகவை சேர்ந்த சவுதா மணி முதற்கொண்டு பலரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
Guess no one knew him as Salim. See how from last 2 decades we’ve been fooled to know him as Yogendra Yadav. pic.twitter.com/5tCKCEb0lq
— Sowdha Mani (@SowdhaMani7) June 2, 2023
Guess no one knew him as Salim. See how from last 2 decades we’ve been fooled to know him as Yogendra Yadav. Can somebody please fact check this. pic.twitter.com/7ZSRmmtXbG
— Sandy 🇮🇳(Sundeep) (@ssingapuri) June 4, 2023
அந்த வீடியோ ‘சலீம் எப்படி யோகேந்திர யாதவ் ஆனார்’ என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. பிறகு அந்த நேர்காணலில் இருவரும் இந்தியில் பேசிக் கொள்கின்றனர்.
உண்மை என்ன ?
யோகேந்திர யாதவ் பெயர் குறித்துப் பரவக் கூடிய வீடியோவில் ‘Jist’ என இலச்சினை (Logo) இருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Jist’ என்னும் யூடியூப் பக்கத்தில் யோகேந்திர யாதவ் அளித்த முழு நேர்காணல் வீடியோ கடந்த மே மாதம் 23ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
அவர்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் யோகேந்திர யாதவ் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், சலீம் என்ற பெயருக்குப் பின்னால் உள்ள கதை மற்றும் சர்ச்சை பற்றிக் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு சலீம் என்ற பெயர் குறித்து யோகேந்திர யாதவ் பேசியது ‘இந்தியா டுடே’ போன்ற ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது. அதில், எனது தாத்தாவின் பெயர் ராம் சிங். அவர் மாணவர் விடுதியில் ஆசிரியராகவும் விடுதி காப்பாளராகவும் பணியாற்றும்போது, விடுதியிலிருந்தவர்கள் சிலர் அருகில் உள்ள மசூதியில் பிரச்சனை செய்தனர். அம்மாணவர்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சில இஸ்லாமியர்கள் என் தாத்தாவிடம் கூறியுள்ளனர்.
அதற்கு எனது தாத்தா ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் எனது தாத்தா கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து நான் பிறந்த போது எனக்கு சலீம் என எனது தந்தை பெயர் வைத்தார். இவ்வாறு பெயர் வைப்பதன் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்த முயன்றார் என நினைக்கிறேன்.
ஆனால், நீ இந்துவாக இருந்தும் சலீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று அனைவரும் என்னைக் கேட்பார்கள். நீ தத்தெடுக்கப்பட்டவன், நீ வளர்ப்பு மகன் என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள். பிறகு பள்ளி சேரும்போது எனது பெயரை யோகேந்திர யாதவ் என மாற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார்.
jist-க்கு அளித்த நேர்காணலிலும் இதே தகவலைத்தான் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். அவர் கூறியதிலிருந்து யோகேந்திர யாதவின் தந்தை தனது மகனுக்கு இஸ்லாமியப் பெயர் வைத்தது ஒரு எதிர்ப்புணர்வாகவோ அல்லது மத நல்லிணக்கத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலோ இருந்திருக்க வேண்டும். அவர் இஸ்லாமியர் என்பதற்காக சலீம் என்ற பெயர் வைக்கவில்லை. அவர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அவர் கூறியதில் இருந்து அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், அரசியல்வாதி யோகேந்திர யாதவிற்கு முதலில் சலீம் என்றுதான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் இஸ்லாமியர் அல்ல. அவரை பள்ளியில் சேர்க்கும் போதே யோகேந்திர யாதவ் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.