பாண்டிச்சேரி மாணவர் கோவிட்-19க்கு மருந்து கண்டுபிடித்ததாக வாட்ஸ்அப் வதந்தி !

பரவிய செய்தி

ஒரு மகிழ்ச்சியான செய்தி இறுதியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கோவிட் 19-க்கான வீட்டு வைத்தியங்களைக் கண்டுபித்தார். இது WHO முதலில் ஒப்புதல் அளித்தது. ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள், இரண்டு டீஸ்பூன் தேன் ஒரு சிறிய இஞ்சி சாறு தொடர்ந்து 5 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், கொரோனாவின் விளைவு 100% வரை அகற்றப்படலாம் என்பதை அவர் நிரூபித்தார். உலகம் முழுவதும் இந்த சிகிச்சையை எடுக்கத் தொடங்குகிறது. இறுதியாக 2020 இல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம். உங்கள் எல்லா குழுக்களுக்கும் அனுப்பவும் நன்றி.

மதிப்பீடு

விளக்கம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தின் மாணவர் ராமு என்பவர் கோவிட்-19 நோய் தொற்றுக்கு வீட்டு வைத்திய முறையை கண்டுபிடித்து உள்ளதாகவும், அதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் ஃபார்வர்டு தகவல் ஒன்று வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Facebook link | archive link 

Advertisement

Twitter link | archive link 

வாட்ஸ் அப்பில் பகிர்ந்த ஃபார்வர்டு தகவலின் ஸ்க்ரீன்ஷார்ட்டை பகிர்ந்து இதன் உண்மைத்தன்மையைக் கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது. இதையடுத்து, இத்தகவல் குறித்து தேடிய பார்க்கையில் கடந்த ஜூலை மாதமே பிற மொழிகளில் இந்த ஃபார்வர்டு தகவல் வைரலாகி இருந்ததை அறிய முடிந்தது.

உண்மை என்ன ? 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கோவிட்-19 தொற்று உறுதியாகி மிதமான பாதிப்பில் இருக்கும் பலருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து குணமாகியதாக பெரிய அளவில் செய்திகளில் வெளியாகின. அதுபோல், கோவிட்-19 தொற்றுக்கு வீட்டு வைத்தியம் கண்டுபிடித்து இருந்தால் பெரிதாய் பேசப்பட்டு இருக்கும். பாண்டிச்சேரி மாணவர் ராமு என்பவர் கோவிட்-19 தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்தது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது ஊடகச் செய்தியோ வெளியாகி இருக்கிறதா எனத் தேடுகையில் அப்படி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

வைரலான தகவல் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங், ” இது போலியானது. இந்த செய்தியில் பல்கலைக்கழகத்தின் பெயரையும் சேர்த்துள்ளனர். எங்கள் மாணவர்கள் யாரும் கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பாக எந்தவொரு கண்டுபிடிப்பும் செய்யவில்லை ” என பூம்லைவ் இணையதளத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

அடுத்ததாக, ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள், இரண்டு டீஸ்பூன் தேன் ஒரு சிறிய இஞ்சி சாறு ஆகியவற்றைக் கலந்து 5 நாட்களுக்கு கோவிட்-19க்கு எடுத்துக் கொள்ளலாம் என ஃபார்வர்டு தகவலில் கூறியுள்ளார்கள். ஆனால், இப்படி கூறப்படும் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் ஏதும் வழங்கவில்லை.

” உங்கள் உணவில் காரமான மிளகுத்தூள் சேர்ப்பது மிகவும் சுவையாக இருந்தாலும், கோவிட்-19ஐ தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது ” என உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. கருப்பு மிளகு மற்றும் தேன் ஆகியவை இருமலுக்கு எதிரான வீட்டு வைத்தியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதேபோல், தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆனால், கோவிட்-19ல் அதன் விளைவு குறித்து தீர்மானிக்கப்படவில்லை.

கோவிட்-19 தொற்றுக்கு உலக அளவில் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி மருந்துகளும் தயாரிக்கப்பட்டு சோதனைக்குள்ளாகி வருகிறது. எனினும், கோவிட்-19க்கு மருந்து என எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

முடிவு : 

நம் தேடலில், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மாணவர் ராமு என்பவர் கோவிட் 19-க்கான வீட்டு வைத்தியங்களைக் கண்டுபித்தார் என பரவும் தகவல் போலியானது. நடக்காத நிகழ்வை ஃபார்வர்டு செய்து வருகிறார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button