புதுச்சேரியில் நடந்த அரசு பள்ளி மாணவிகளின் போராட்டத்தை தமிழ்நாடு என வதந்தி பரப்பிய பாஜகவினர்!

பரவிய செய்தி
முதல்வர் ஸ்டாலின் அவர்களே சொன்னா கோச்சிக்கிறீங்க இருந்தாலும் சொல்லித்தான் ஆகணும். உங்க அரசாங்கம் உண்மையிலேயே கையாளாகாத அரசாங்கம் தான்.Archive Link
மதிப்பீடு
விளக்கம்
இந்த பள்ளி மாணவிகளுக்கு எந்த பள்ளியில் படிக்கின்றோம் என்பதே தெரியவில்லை, இது தான் ஸ்டாலினின் அரசாங்கம் எனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலினையும், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷையும் குறிப்பிட்டு, பள்ளி மாணவிகளின் போராட்ட வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மேற்காணும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உள்பட பலரும் பகிர்ந்து இருந்தனர்.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டிலுள்ள பள்ளி என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த பள்ளி மாணவிகள் கடந்த ஆண்டிலிருந்தே ஒவ்வொரு பள்ளியாக அலைக்கழிக்கப்ப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், புதுச்சேரி பழைய சட்டக் கல்லூரி இடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் இயங்கி வந்த பாரதியார் மேல்நிலைப் பள்ளியை, சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளதாகக் கூறி, அப்பள்ளியை குருசுகுப்பம் என்.கே.சி மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு மாற்ற புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.
ஆனால் என்.கே.சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஷிஃப்டு முறையில் பள்ளி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் திரு.வி.க ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு உள்ள மாணவர்களை வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து திருவிக ஆண்கள் பள்ளி மற்றும் வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை தங்கள் பள்ளிகளில் அனுமதிக்காமலும், எங்களால் இடமாற்றம் செய்ய முடியாது என்று கூறி தொடர்ந்து எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதையடுத்தே அலைக்கழிக்கப்பட்ட பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கடந்த ஜூன் 15 அன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியின் உள்துறை மற்றும் கல்வி அமைச்சரான ஆ.நமச்சிவாயம் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று, மாணவர்களிடையே பேச்சு வார்த்தை செய்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வீரமா முனிவர் பள்ளி மற்றும் சுப்ரமணிய பாரதிய மகளிர் பள்ளி ஆகிய மாணவர்கள் பள்ளியை முழுநேர நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தினேன். (1/1) pic.twitter.com/sPg4KvG5EX
— A.Namassivayam (@ANamassivayam) June 15, 2023
இது குறித்து அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “வீரமாமுனிவர் பள்ளி மற்றும் சுப்ரமணிய பாரதிய மகளிர் பள்ளி ஆகிய மாணவர்கள் பள்ளியை முழுநேர நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தினேன்.” எனக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளவாறு மாலைமுரசு செய்தியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வீடியோ குறித்து தேடியதில், அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “எங்கள ஸ்கூல் குள்ள வரக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு ? – அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் !” என்று குறிப்பிட்டும், பாண்டிச்சேரி (#pondicherry) என்று டாக் செய்தும் பதிவிட்டிருந்தனர்.
மேலும் படிக்க : இலந்தைப் பழ மரத்தின் வயது 2,000 ஆண்டுகள் என அமர் பிரசாத் பதிவிட்ட பொய் தகவல் !
முடிவு:
நம் தேடலில், போராட்டம் செய்த மாணவிகளின் பள்ளியான பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாட்டைச் சேர்ந்தது எனப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், இது புதுச்சேரியில் நிகழ்ந்தது என்பதையும் அறிய முடிகிறது.