பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கியது. ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட அப்பணத்தைக் கொண்டு, டாஸ்மார்கில் மது வாங்கியதாகப் புகைப்படம் ஒன்றினை தினமலர் நியூஸ் கார்டாக கடந்த 9ம் தேதி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுத்தது….🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/fNBGrx8iiX
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) January 9, 2023
அதில், “ரேசன் கடையில அரசு கொடுத்த ஆயிரம் ரூவா திரும்பவும் போகுமிடம்…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படத்தில், உள்ள வாகனத்தில் கரும்பு இருப்பதும், ஒருவர் டாஸ்மார்க் கடையில் வாங்குவதும் பதிவாகி உள்ளது.
பொங்கல் பரிசு 😁😁😁 pic.twitter.com/BcQfFgzpYL
— Gowri Sankar D (@GowriSankarD_) January 9, 2023
இப்புகைப்படத்தினை, மீடியான் இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவணபிரசாத் பாலசுப்ரமணியன், அதிமுக-வை சேர்ந்த கௌரி சங்கர் முதற்கொண்டு பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
2023ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 பணமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
இதன் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற சுமார் ரூ.2,356.67 கோடி அரசு ஒதுக்கியது. பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்ததையடுத்து கரும்பும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
2/2
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 9, 2023
இந்நிலையில், ஜனவரி 9ம் தேதி சென்னை, சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசுப் பொருளுடன் இலவச வேட்டி, சேலை வழங்கி அத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்தே அரசு கொடுத்த பொங்கல் பணத்தைப் பெற்றதும், டாஸ்மார்க் சென்று மது வாங்கியதாகப் பரவும் தினமலர் நியூஸ் கார்டில் உள்ள புகைப்படம் குறித்துத் தேடினோம்.
அதிலுள்ள புகைப்படத்தைக் கூகுள் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், அப்புகைப்படம் 2021ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
2021ம், ஏப்ரல் 18ம் தேதி கார்த்தி பத்ரி என்ற பேஸ்புக்கில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதற்கும் முன்னதாகவே 2021, ஜனவரி 6ம் தேதி செந்தில் குமார் என்ற டிவிட்டர் பக்கத்திலும் இப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அவ்வாண்டு ஜனவரி 4ம் தேதி முதல் பொங்கல் பரிசுப் பொருள்கள் ரேசன் கடைகளில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு வாங்கிய கணவரிடம் மனைவி கேட்டாள் எந்த பாவி உங்கள இப்படி குடிக்க வச்சது?
ரேசன் கடை டூ டாஸ்மார்க் pic.twitter.com/sl5eQSU768
— செந்தில்குமார் I.N.D.I.A 🌅🌍🌧️🌾🌾🌴🌴🌴 🖤❤🌄 (@keerasrs) January 6, 2021
இதிலிருந்து, பரவக்கூடிய புகைப்படம் 2021ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைக் காண முடிகிறது. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக. அந்த பழைய புகைப்படத்தினை தற்போது எடுத்தது போல் தினமலர் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், தினமலர் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டு புகைப்படம் 2021ம் ஆண்டு ஜனவரி முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை அறிய முடிகிறது.