சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என அமைச்சர் பொன்முடி கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள். பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்! – திருமண விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பேச்சு!
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 15-ன் படி, மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை நமது அரசியலமைப்பு தடை செய்துள்ளது. இருப்பினும் பல நூறு ஆண்டுகளாக நிலவி வரும் சாதிவெறி தற்போதைய 21-ஆம் நூற்றாண்டிலும் கூட தொடர்ந்து வருவது சமூகநீதி கொண்ட தமிழ்நாட்டில் வருத்ததிற்குரியதாகவே பார்க்கப்படுகிறது.
இதனை வெளிச்சம் காட்டும் விதமாக கடந்த ஜூன் 7 அன்று விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியல் சாதியினர் நுழைவதை மற்றொரு சாதியினர்கள் தடுத்ததன் விளைவாக ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்தக் கோவில் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பேசியதாகக் கூறி தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி இது குறித்து எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது தொடர்பாக தந்தி டிவி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் ஏதாவது நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதா என்பது குறித்து தேடியதில், இறுதியாக கடந்த மே 19 அன்று “கலை – அறிவியல் சேர்கைக்கு அவகாசம் நீட்டிப்பு” என்னும் தலைப்பில் “கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 22ம் தேதி வரை நீட்டிப்பு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்” என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.
#JUSTIN || “கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 22ம் தேதி வரை நீட்டிப்பு
*ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் பொன்முடி#Ponmudy #ThanthiTV pic.twitter.com/yPeAiAdCsb
— Thanthi TV (@ThanthiTV) May 19, 2023
மேலும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாக சித்தரித்து, பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததாகக் கூறி தந்தி டிவி நேற்று (ஜூன் 11) செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிந்தது.
அதில், “திருமண நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பேசியதாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது. இந்நிலையில், வதந்தியை பரப்பிய கலியபெருமாள் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார்.” என்று அதில் குறிப்பிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அமைச்சர் பேசியதாக பரவும் வதந்தி..திமுக MLA புகார்https://t.co/K3edVEiZpI#mla #minister #dmk #ThanthiTV
— Thanthi TV (@ThanthiTV) June 11, 2023
எனவே மே 19 அன்று அமைச்சர் பொன்முடி கலை-அறிவியல் கல்லூரி சேர்க்கை குறித்து பேசியதாக தந்தி டிவி வெளியிட்ட நியூஸ்கார்டை எடிட் செய்து தவறான செய்திகளுடன் பரப்பியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என அமைச்சர் பொன்முடி கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.