பூம்புகார் ஆழ்கடல் தொன்மம் 11,000 ஆண்டுகள் பழமையானதா ?| உண்மையான தகவல் என்ன?

பரவிய செய்தி

1991-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரகாம் ஹான்காக் எனும் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர், தமிழகத்தின் காவேரிபூம்பட்டிணம் எனும் பூம்புகாரின் ஆழ்கடலில் 11,000 ஆண்டுகள் பழமையான தமிழர் நாகரிகம் இருப்பதை கண்டுபிடித்து புகைப்படங்களையும், ஆவணங்களையும் மத்திய அரசிடம் பெங்களூரில் சமர்ப்பித்தார். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் அதை கண்டுகொள்ளவே இல்லை. அதிர்ந்துபோன அவருக்கு இன்னொரு அதிர்ச்சி இது பற்றி அவரை பேசியதை இந்தியாவில் ஒளிபரப்பவும் இல்லை. பிறகு இங்கிலாந்தின் 4சேனல் நிறுவனம் ஒலிபரப்பியது. poompuhar

Facebook link

மதிப்பீடு

சுருக்கம்

பிரிட்டிஷ் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான கிரகாம் ஹான்காக் பூம்புகார் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட தகவலும், National institute of oceanography of india அளித்த அதிகாரப்பூர்வ தகவலையும் விரிவாக காண்போம்.

விளக்கம்

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட  அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருட்கள் பலவும் தமிழர் நாகரீகத்தின் தொன்மைக்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. குறிப்பாக, கீழடியில் அகழ்வாராய்ச்சி 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற மக்கள் வசித்து வந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நிலப்பகுதியில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் மட்டுமல்லாமல் கடல் பகுதியிலும் கிடைத்த தொல்பொருட்களும் பேசும் பொருளாக மற்றும் மறைக்கப்படும் உண்மை என தலைப்பிலும் விவாதிக்கப்படுகிறது.

ஆம், காவேரிபூம்பட்டிணம் எனும் பூம்புகார் பகுதியின் கடலுக்கு அடியில் 11,000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் இருந்தற்கான ஆதாரங்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரகாம் ஹான்காக் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டதாக மீம் பதிவுகள், வீடியோக்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில ஆண்டுகளாகவே பரவி வருகிறது. ஆகையால், அவற்றின் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பதிவிட வேண்டிய அவசியம் உள்ளது.

Advertisement

பூம்புகார் ஆராய்ச்சி : 

பூம்புகார் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான அமைப்பு குறித்து பிரிட்டிஷ் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான கிரகாம் ஹான்காக் மட்டுமே கண்டுபிடித்ததாக கூறுவது பொருந்தாத தகவல். முதலில் 1991 மற்றும் 1993-ம் ஆண்டில் இந்திய நிறுவனமான National institute of oceanography of india-வை சேர்ந்த கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் பூம்புகார் கடற்பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 70 அடி ஆழத்தில் சுவர் அமைப்பு ஒன்றினை கண்டுபிடித்தனர்.

இந்த செய்தி அறிந்த பிறகே கிரகாம் ஹான்காக் தன்னுடைய குழுவுடன் வீடியோ கேமராக்களை கொண்டு பூம்புகார் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கிரகாம் ஹான்காக் பூம்புகார் மட்டுமின்றி NIO குழுவினர் ஆய்வு செய்த மகாபலிபுரம் கடல் பகுதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கிரகாம் ஹான்காக் உடைய இணையதளத்தில் 2002-ம் ஆண்டில் “Online Introduction to Underworld From Fingerprints of the Gods to Underworld ” என்ற தலைப்பிலும், 2003-ம் ஆண்டில் ” A Study of the Poompuhur “U-Shaped” Object ” என்ற தலைப்பிலும் பூம்புகார் குறித்த விரிவான கட்டுரைகள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

2002-ல் வெளியான கட்டுரையில், ” உண்மையில் க்ளென் மில்னின் கடல் மட்ட தரவுகளின்படி, 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் பனி யுகத்தின் முடிவில் இந்த அமைப்பு கட்டப்பட்டு இருக்கும் நிலமானது தண்ணீருக்கு மேலே இருந்து இருக்கலாம் ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கட்டுரையில் மட்டுமே 11,000 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், 2013-ல் வெளியான அறிக்கையில் அவ்வாறு ஏதும் குறிப்பிடவில்லை.

“U” வடிவ அமைப்பு குறித்து வெளியிட்ட ” A Study of the Poompuhur “U-Shaped” Object ” கட்டுரையில் கடலுக்கு அடியில் இருந்த அமைப்பை சுவராகவோ அல்லது மதில் எனக் குறிப்பிடாமல் ” anomaly ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இறுதியாக, பூம்புகாரில் கடலுக்கு அடியில் இருக்கும் அமைப்பு மனிதர்களால் அல்லது இயற்கையால் உருவாக்கப்பட்டது இருக்கலாம். மேலும், NIO குழுவின் உறுப்பினர்கள் இந்த அமைப்பு இயற்கையால் உருவாக்கப்பட்டது என நினைக்கின்றனர். என்னுடைய கருத்து, இது மனிதரால்தான் உருவாக்கப்பட்டு இருக்கும் என நம்புவதாக குறிப்பிட்டு இருக்கிறார். இதன்மேல் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவேண்டும், ஆய்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மைகள் தெரிய வரும் எனக் கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல் : 

பூம்புகார் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அமைப்பு குறித்த ஆராய்ச்சிகள் தொடர்பாக பேச நினைத்தால் மிக நீண்ட கட்டுரையாக சென்றுக் கொண்டே இருக்கும். எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறோம். முதலில் இயற்கையால் உருவாக்கப்பட்ட அமைப்பாக கருதி வந்த NIO குழுவினர் பின்னர் பூம்புகார் பகுதியில் இருந்த சுவர் போன்ற அமைப்பில் இருந்த பகுதியை கரைக்கு எடுத்து வந்து ஆய்வு செய்தனர். அதன்பின்னே, அவை செங்கற்களால் உருவாக்கப்பட்டது என முடிவு செய்யப்படுகிறது.

அந்த மாதிரிகளை கொண்டு கார்பன் பாகுபாய்வு செய்த முடிவுகளை National institute of oceanography வெளியிட்டது. அதில், அங்கு கிடைத்த பொருட்கள் கிமு 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பூம்புகார் தோராயமாக 2300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். ஆக, பூம்புகாரின் கடலுக்கு அடியில் கிடைத்த பழமையான அமைப்புகள் சங்ககாலத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மீட்டர் உயரம் கடல் நீர் புகுந்த காரணத்தினால் பழமையான பூம்புகார் நகரம் கடலுக்குள் சென்றிருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இதேபோல், ”  பூம்புகாரின் ஒருபகுதியில் எடுக்கப்பட்ட மாதிரியின் கார்பன் பகுப்பாய்வு முடிவுகள் 2300 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறுவதாக ”  எகானாமிக் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 20,000 ஆண்டுகளுடைய பருவநிலை மாற்றங்கள் மற்றும் கடல் நீர் அளவுகளின் மாற்றங்கள் ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, பூம்புகாரில் கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட பகுதிகள் 11,000 ஆண்டுகள் பழமையானது என கிரகாம் ஹான்காக் ஆதாரத்துடன் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. பூம்புகார் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டார் என்பது உண்மையாக இருந்தாலும் அவர் மட்டுமே கண்டுபிடித்ததாக கூறுவது தவறான தகவல். 1991-ல் கடலுக்கு அடியில் பூம்புகாரின் பழமையான அமைப்புகளை கண்டுபிடித்தது NIO குழுவினர், கிரகாம் ஹான்காக் அல்ல.

NIO-வின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, பூம்புகாரின் கடல் பகுதியில் எடுக்கப்பட்ட கட்டமைப்பு தோராயமாக 2300 ஆண்டுகள் பழமையானவை என கார்பன் பகுப்பாய்வு மூலம் அகழாய்வு அறிக்கைகளை வெளியிட்டு உள்ளனர். சரியான ஆதாரங்கள் இல்லாமலும், கிடைத்த குறைந்த தரவுகளை வைத்துக் கொண்டு யாரோ வெளியிட்ட தகவல்கள் மக்களால் உண்மை என்ன நம்பப்பட்டு வருகிறது. கடலுக்கு அடியில் இருக்கும் பழமையான பூம்புகார் பகுதிகள் சங்காலத்தைச் சேர்ந்தவை என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close