போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கையறை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
140 கோடி கத்தோலிக்கரை வழிநடத்தும் திருத்தந்தையின் அறை.
மதிப்பீடு
விளக்கம்
கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க பிரிவின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். 140 கோடி கத்தோலிக்கரை வழிநடத்தும் இவர், ஓர் எளிய அறையில் வசிப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
போப் பிரான்சிஸின் அறை எனப் பரப்பப்படும் புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடுகையில், ‘Aleteia’ எனும் இணையதளத்தில் அப்புகைப்படம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பதிவிடப்பட்டுள்ளது.
பியோவின் அறையை போப் பிரான்சிஸ் பார்வையிட்டார் எனத் தலைப்பிட்ட அப்பதிவில், 2018ம் ஆண்டு, மார்ச் மாதம் 17ம் தேதி போப் பிரான்சிஸ் சான் ஜியோவானி ரோடோண்டோ பகுதியில் உள்ள புனிதர் பியோவின் அறையைப் பார்வையிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புகைப்படத்தை வாடிகன் பத்திரிக்கையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மேற்கொண்டு தேடியதில் 2022, ஜூலை 26ம் தேதி, இதே புகைப்படம் ‘Padre Pio Devotions’ என்னும் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பியோ 52 ஆண்டுகள் வாழ்ந்த அறைக்கு போப் பிரான்சிஸ் வருகை தந்தார் என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போப்பின் அறை குறித்துத் தேடியதில், 2013ம் ஆண்டு வெளியான சில செய்திகள் கிடைத்தது. பிபிசி-யில் வெளியான செய்தியில், வாடிகன் அப்போஸ்தலிக் அரண்மனையின் மேல் தளத்தில் போப்பிற்காக உள்ள பிரம்மாண்ட குடியிருப்பைத் தவிர்த்துவிட்டு, இரண்டு அறைகள் உள்ள வீட்டில் குடியிருக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ முயல்கிறார் என அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் பல ஆண்டுகளாகப் பின்பற்றிவந்த முறையை போப் பிரான்சிஸ் மாற்றியுள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘ABC நியூஸ்’ என்னும் யூடியூப் பக்கத்திலும் செய்தி பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், பரவக்கூடிய புகைப்படத்திற்கும் அவர் குடியேறியதாகச் சொல்லப்பட்டும் வீடும் ஒன்றல்ல.
மேலும் படிக்க : போப் பிரான்சிஸ் இளம் பெண்களுடன் குளித்ததாகத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !
இதற்கு முன்னதாக போப் இளம் பெண்களுடன் குளித்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன. அது AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்ற உண்மையினை யூடர்ன் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், போப் பிரான்சிஸ் எளிமையாக வசிக்கும் வீடு எனப் பரப்பப்படும் புகைப்படம் உண்மை அல்ல. அது 2018ம் ஆண்டு புனிதர் பியோவின் அறையை போப் பிரான்சிஸ் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிகிறது.