போப்பை பல்லக்கில் தூக்கிச் செல்வதாக வைரலாகும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுர ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதாசத்தை பல்லக்கில் தூக்கும் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாச்சியர் பாலாஜி தடைவிதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதற்கு, மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆளும் அரசிற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, ஆதீனங்களுடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார்.
தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தில் மனிதரை மனிதரே தூக்கும் நிலை மாற வேண்டும் என தி.க அமைப்பு உள்ளிட்டோர் தெரிவித்து வருகையில், வாடிகன் நகரில் கிறிஸ்தவ மத போதகர் போப் ஆண்டவரை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வதாகவும், இது பிற்போக்குத்தனத்தில் சேராதா என பாஜகவினர் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் இப்புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன ?
போப் ஆண்டவரை பலக்கில் தூக்கிச் செல்வதாக பரப்பப்படும் புகைப்படங்கள், 1963 முதல் 1978 வரை போப் ஆண்டவராக இருந்த ஜான் பால் VI “ செடியா கெஸ்டடோரியா ” என்ற சடங்கின் போது சிம்மாசன இருக்கை கொண்ட பல்லக்கில் ஊர்வமாக கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்டவை.
இந்த நடைமுறைக்கு போப் மத்தியில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், 1978-ல் போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் பால் II வந்த பிறகே இந்த பாரம்பரிய முறை முழுமையாக அகற்றியதாக தி வாஷிங்டன் போஸ்ட் 2015-ல் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறது.
இதன்பிறகு, சிம்மாசன இருக்கை கொண்ட பல்லக்கிற்கு பதிலாக போப் ஜான் பால் II ” popemobile ” எனும் வாகனத்தை பயன்படுத்த துவங்கினார். அதன் பின்னர் வந்தவர்களும், வாகனத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், தருமபுர ஆதீன விவாகரத்தில் போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கிச் செல்வதாக பகிரப்படும் புகைப்படங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்த பழைய புகைப்படங்கள். போப் ஆண்டவரை இருக்கை கொண்ட பல்லக்கில் தூக்கிச் செல்லும் நடைமுறை 1978-ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, வாகனத்தில் செல்லும் நடைமுறையில் இருப்பதையும் அறிய முடிகிறது.