போப் பிரான்சிஸ் உலகை ஆளும் இலுமினாட்டிகளின் காலில் விழுவதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
போப்பாண்டவரை கட்டுப்படுத்துவது யார் ? அவர் யார் காலில் விழுந்து வணங்குகிறார்? மிகவும் சிந்திக்க வேண்டிய பதிவு இது.
மதிப்பீடு
விளக்கம்
ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான போப் பிரான்சிஸ் உலக அமைதிக்காக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் தற்போது அவரை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் காலில் விழுகிறார் எனக் கூறி போப் பிரான்சிஸ் சிலரின் கைகளுக்கு முத்தமிடுவது போன்றும், காலில் விழுவது போன்றும் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அப்பதிவுகளில் இலுமினாட்டி குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
போப்பாண்டவர் ரை கட்டுப்படுத்துவது யார் ? அவர் யார் காலில் விழுந்து வணங்குகிறார்? மிகவும் சிந்திக்க வேண்டிய பதிவு இது. pic.twitter.com/LdvQ9yC6oD
— 🚩🚩🚩Senthil.C🚩🚩🚩 (@senthilkumarpcm) May 12, 2023
போப்பாண்டவர் ரை கட்டுப்படுத்துவது யார் ? அவர் யார் காலில் விழுந்து வணங்குகிறார்? மிகவும் சிந்திக்க வேண்டிய பதிவு இது. pic.twitter.com/ureBthvmGy
— sitaraman2015@gmail. (@sitaramanboi201) May 11, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவை ஆய்வு செய்து பார்க்கையில், போப் பிரான்சிஸ் வெவ்வேறு நாடுகளில் கலந்து கொண்ட நிகழ்வுகளின் இரண்டு வீடியோக்கள் ஒரே தலைப்பில் சமூக வலைதளங்களில் பரப்பி வந்துள்ளதை அறிய முடிந்தது. மேலும் அவ்வீடியோக்களில் உள்ள கீபிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்க்கையில், முதல் வீடியோவின் உண்மையான வீடியோவை CNN தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் பக்கத்தில் 2016 ஏப்ரல் 01 அன்று வெளியிட்டுள்ளது.
அதில் போப் பிரான்சிஸ் இரண்டாம் உலகப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட 6 மில்லியன் யூதர்களின் நினைவாக கட்டப்பட்ட அதிகாரப்பூர்வமான நினைவு சின்னமான இஸ்ரேலில் உள்ள யாட் வஷெம் (Yad Vashem) என்னும் ஹோலோகாஸ்ட் நினைவிடத்திற்கு சென்ற போது, அந்த படுகொலையில் உயிர் தப்பித்தவர்களின் கதைகளைக் கேட்டு மனமுருகி, அவர்களின் மீதுள்ள பணிவு மற்றும் மரியாதையின் அடையாளமாக அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளார். இது தொடர்பாக National Post மற்றும் Euro News போன்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும் பரவி வரும் இரண்டாவது வீடியோவை ஆய்வு செய்து பார்க்கையில், அதன் உண்மையான வீடியோவை Voice of America என்னும் ஊடகம் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 2019 ஏப்ரல் 11 அன்று வெளியிட்டுள்ளது.
அதில் போப் பிரான்சிஸ் அவர்கள் தெற்கு சூடான் நாட்டில் 2013-இல் நிகழ்ந்த போரில் ஈடுபட்ட தலைவர்களிடம் மீண்டும் உள்நாட்டு போருக்கு திரும்ப வேண்டாம் என வேண்டியதுடன் “அமைதியாக இருங்கள் என்று ஒரு சகோதரனாக நான் உங்களை என் இதயத்திலிருந்து கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி அவர்கள் கால்களில் முத்தமிடுவது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது.
பின்னர் தெற்கு சூடான் தலைவர்கள் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, போரை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர் என்பதை பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் படிக்க: போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கையறை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !
மேலும் படிக்க: போப் பிரான்சிஸ் இளம் பெண்களுடன் குளித்ததாகத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !
இதற்கு முன்பும் போப் பிரான்சிஸ் தொடர்பான தவறான செய்திகள் குறித்து நம் யூடர்ன் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: போப்பை பல்லக்கில் தூக்கிச் செல்வதாக வைரலாகும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் !
முடிவு:
நம் தேடலில், போப் பிரான்சிஸ் உலகை ஆளும் தலைவர்களின்(இலுமினாட்டி) கைகள் மற்றும் காலில் விழுந்து முத்தமிடுவதாகக் கூறி பரப்பப்படும் வீடியோக்கள் தவறானவை. அந்த வீடியோக்களில் இருப்பது ஹோலோகாஸ்ட் படுகொலையில் உயிர் தப்பித்தவர்கள் மற்றும் சூடான் நாட்டின் அரசியல் தலைவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.