தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் !

பரவிய செய்தி
தபால்துறையில் முதன்மைப் பணியிடங்களுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். மாநில மொழிகளில் நடைபெறாது – தொலைத்தொடர்புத் துறை அறிவிப்பு
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் தபால்துறை அலுவலங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட 4 முக்கிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடைபெற்று வந்தன.
அஞ்சலகத்துறையில் நடைபெறும் எழுத்துத்தேர்வில் விருப்ப மொழியை தேர்வு செய்யும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற உள்ள தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தபால்துறை சார்பாக நடைபெறும் தேர்வில் மூன்று தாள்கள் இடம்பெறும். அதில், தாள் 1 மற்றும் இரண்டு தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் பணிக்கான தகுதியினை பெறுவார்கள். தாள் 3-ஐ தவிர மற்ற இரண்டு தாள்களும் பல விடைக் கொண்ட கேள்விகள் அடிப்படையில் நடைபெறும்.
” இவற்றில் உள்ள கேள்விகள் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் இருக்கும் ” என மே 16-ம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால், நடக்க உள்ள தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் என மாற்றியமைத்து உள்ளனர்.
2016-17-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற தபால்துறை தேர்வில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வழக்கிலும் இவ்விவகாரம் தொடர்பாக கேள்விகள் எழுந்தது.
தமிழக கிராமப்புறங்களில் இருக்கும் தபால்துறையில் எந்த பணியாக இருந்தாலும் தமிழ் மொழி அறிந்தவர்கள் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். ஆங்கிலமோ, இந்தியோ உதவாது. இது தென்னந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
தற்பொழுது 1,000 பணியிடங்களான தேர்வில் மாநில மொழிகளுக்கு இடமில்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடைபெறும் என மத்திய அரசு கூறி இருப்பது அநீதியாகும். நேரடியாகவே, பிற மாநிலங்களில் உள்ளவர்கள் இங்குள்ள பணியிடங்களை ஆக்கிரமித்து கொள்ள வழிவகை செய்யும் விதத்தில் இந்த அறிவிப்புகள் அமைந்து உள்ளன என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகின்றன.
Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .