பொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி !

பரவிய செய்தி
தமிழ் கடவுள் முருகனுக்கு வந்த நிலையை பாருங்கள். நடுநிலை ஹிந்துக்கள் எங்கே? திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர். முருகன் கோயிலை பள்ளி வாசலாக மாற்றி ஆக்கிரமித்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் இஸ்லாமியர்கள். முதலில் கோவில் சிலை திருடப்பட்டுள்ளது. சிலை இல்லாததால் பூஜை இல்லை. பூஜை இல்லாத கோயில் நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று மசூதியாகி விட்டது. ஹிந்துக்கள் ஒன்றினைந்து இதை மீட்க வேண்டும். செய்வீர்களா ? அதிகம் பகிருங்கள். பல கோடி ஹிந்துக்களுக்கு இது சென்றடைய வேண்டும் !
மதிப்பீடு
விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலை அங்குள்ள இஸ்லாமியர்கள் பள்ளி வாசலாக மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள் என சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளை காண நேரிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பதிவு சுற்றித் திரிகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர்.
முருகன் கோயிலை பள்ளி வாசலாக மாற்றி ஆக்கிரமித்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் இஸ்லாமியர்கள்.முதலில் கோயிலில் சிலை திருடப்பட்டுள்ளது.
சிலை இல்லாததால் பூஜை இல்லை..பூஜை இல்லாத கோயில் நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று மசூதியாகி விட்டது.. pic.twitter.com/pxwFYX4ClG— பாரதி கண்ணம்மா…🇮🇳 ஜெய் ஶ்ரீராம் (@vanamadevi) April 24, 2018
உண்மை என்ன ?
தமிழகத்தில் இந்துக் கோவிலை இஸ்லாமியர்கள் மசூதியாக மாற்றி உள்ளார்கள் எனத் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் சமூக வலைதளப் பதிவுகளை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். இதுதெடர்பாக யூடர்ன் பல கட்டுரைகளை வெளியிட்டும் இருக்கிறது. அவற்றின் தொடர்ச்சியாக, முருகன் கோயிலை மசூதியாக மாற்றியதாகப் பரப்புகிறார்கள் எனத் தோன்றியது.
தற்போது, பரப்பப்படும் பதிவில் இடம்பெற்ற புகைப்படம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்றாக அறியப்படும் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்காவாகும். முகைதீன் ஆண்டவர் தர்கா 1674 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு நடத்தப்படும் வழிபாடு இந்துக்களின் வழிபாட்டு சாயலை ஒத்ததாக இருக்கும் எனக் கூறுகிறார்கள். இந்த தர்காவிற்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் வருகை தருகிறார்கள்.
முகைதீன் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதால் இந்த தர்கா மத ஒற்றுமைக்கு ஒரு சிறந்த பாலமாக உள்ளது. நாகூர் தர்காவிற்கு இணையாக பிரசித்தி பெற்றதாகவும் அறியப்படுகிறது. இப்படி புகழ்பெற்ற தர்காவையே முருகன் கோவில் என ஆதாரமில்லாத வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொட்டல்புதூர் தர்காவின் அறக்கட்டளை நிர்வாகம் சார்ந்த வழக்கின் தீர்ப்பில், ” தர்கா 1674 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையானது என்றும், அங்கு முஸ்லீம்கள் மட்டுமின்றி இந்து மற்றும் கிறிஸ்தவ பக்தர்களும் வருவதாக ” இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலா ?| வரலாறு அறிக.
தமிழகத்தில் அமைந்திருக்கும் பெரும்பாலான பழமையான மசூதி மற்றும் கிறித்தவ வழிபாட்டு கூடங்கள் இந்திய கட்டிக்கலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அமைக்கப்பட்டு இருக்கும் தூண்கள், அலங்கார சிற்பங்கள், மண்டபங்கள் என அனைத்தும் இம்மண்ணின் கட்டிடக்கலையை பிரதிபலித்து இருக்கும். அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து இந்துக் கோவில்களை மசூதியாகவும், சர்ச் ஆகவும் மாற்றி உள்ளார்கள் தொடர்ந்து வதந்தியையே பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : ராமநாதபுரத்தில் கோவிலை சர்ச் ஆக மாற்றி உள்ளார்களா ?| எங்கு அமைந்துள்ளது ?
இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்கள் ஆதாரங்கள் ஏதுமில்லாமல் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கின்றனர். மதம் சார்ந்த புரளிகள் சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுபோன்ற பதிவுகளும் உதாரணமாக உள்ளன.