பிரபாகரனுக்கு ஜெ.அன்பழகன் உதவியதாக அமீர் அளித்த பேட்டியால் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
பிரபாகரனும் ஜெ.அன்பழகனும் ! 1982 மே 19 சென்னை பாண்டிபஜார் உணவகத்தில் பிரபாகரனும் ப்ளாட் தலைவர் உமாமகேஸ்வரனும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்கின்றனர். இருவருக்கும் காயம் இல்லை. உமாமகேஸ்வரனுடன் வந்தவருக்கு காலில் காயம்.
போலீஸ் சுற்றிவளைத்து பிரபாகரனை கைது செய்தது. தப்பிய மகேஸ்வரனும் பின்னர் கைது செய்யபட்டார். இருவரும் பிரபாகரன் கரிகாலன் என்றும், உமாமகேஸ்வரன் முகுந்தன் என்றும் பெயரை மாற்றி கொடுத்தபோதும் காவல்துறையினர் இவர்கள் யார் என்று கண்டுபிடித்தனர். பிரபாகரனை ஜாமீனில் எடுத்து அவரை தங்கவைக்க ஏற்பாடு செய்தார் கலைஞர். அவரை 21 நாள் தன் அலுவலகத்தில் தங்கவைத்து உணவளித்தவர் ஜெ.அன்பழகன்.
மதிப்பீடு
விளக்கம்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுகவின் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அவரின் இறப்பிற்கு கட்சி பாகுபாடின்றி பலரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெ.அன்பழகன் குறித்து ஜூன் 10-ம் தேதி Behindwoods சேனலில் இயக்குனர் அமீர் அளித்த பேட்டி ” பிரபாகரனை காப்பாற்றி கொண்டு வந்த அன்பழகன் “- வெளிவராத ரகசியங்கள் சொல்லும் அமீர் ” என்கிற தலைப்பில் வெளியாகியது.
இந்த பேட்டியில், ” ஜெ.அன்பழகன் தயாரிப்பில் தான் இயக்கிய ஆதிபகவன் திரைப்படம் குறித்து பேசிய இருந்தார். பின்னர், 1982-ம் ஆண்டு நிகழ்ந்த பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்ட பிரபாகரனை கருணாநிதி சொல்லி ஜெ.அன்பழகன் ஜாமினியில் எடுத்து தனது தி.நகர் அலுவகத்தில் 21 நாட்கள் தங்க வைத்தார் ” என யாருக்கும் தெரியாத ரகசியத்தை கூறியுள்ளார். இயக்குனர் அமீரின் இப்பேட்டியால் பிரபாகரனும், ஜெ.அன்பழகனும் எனும் தலைப்பில் நீண்ட பதிவுகளை திமுக கட்சி முகநூல் பக்கங்களில் சிலர் பதவிடத் தொடங்கி விட்டனர்.
ஆனால், 1982 பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திமுகவின் செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ் ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் ” வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகின்றது என்பதற்கு கண்முன் காணப்படும் உதாரணமாக கொள்க” என அமீரின் பேட்டியை மறுத்து நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார்.
அவரின் பதிவில், ” பிரபாகரனை 23-05-1982 அன்று சென்னை மத்திய சிறையில் சந்தித்தேன். அடுத்தநாள் நெடுமாறன் அவர்கள் உடன் சென்று சந்தித்தேன். 24-07-1982 அன்று வைகோ அவர்களை அழைத்து சென்று பிரபாகரனை சந்தித்தேன். 05-08-1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பினை ஆனை கோரி மனுவை தாக்கல் செய்தேன். அடுத்தநாள் 6-08-1982 நிபந்தனையின் பேரில் பிணை ஆனை கிடைக்கபெற்றேன். மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலையும், நானும் ஆஜர் ஆனோம். நிபந்தனைபடி, பிரபாகரன் மதுரையிலும், முகுந்தன் சென்னையிலும் தங்கி காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள். நெடுமாறன் பிரபாகரனை அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். மதுரை மேலவாசி வீதி விவேகானந்த அச்சத்திற்கு எதிரே உள்ள தனது பழைய வீட்டில் தங்க வைத்தார் ” எனக் கூறியுள்ளார்.
இந்த முகநூல் பதிவில், 1982-ல் போலீஸ் பதிவு செய்த வாக்குமூலத்தின் நகலையும் இணைத்துள்ளார். வரலாற்றை திரித்து மாற்றும் பொழுது அமைதியாக இருக்க முடியாது அல்லவா ? எனக் கேட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இதே தகவலை தன்னுடைய கடந்தகால நினைவுகள் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவு செய்து வந்துள்ளார்.
கடந்தகால நிகழ்வுகளை திரித்து தவறான தகவலை கூறுவதாக இயக்குனர் அமீர் மீது பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக கட்சியைச் சேர்ந்த சிலரும் தவறான தகவலை பகிர வேண்டாம் என நீண்ட பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் குறித்து தெரியாத ரகசியம் என இயக்குனர் அமீர் கூறிய தகவல் தவறானதே. இயக்குனர் அமீர் தவறான தகவலை பகிர்ந்து உள்ளார் என எதிர்ப்புகள் எழுந்த பிறகும் அவரின் பேட்டியோ, அவர் குறித்த பதிவோ நீக்கப்படவில்லை. உண்மைத்தன்மை தெரியாமல் வரலாற்றையே மாற்றும் வகையில் தவறான தகவலை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.