Fact Checkஅரசியல்தமிழ்நாடு

பிரபாகரன் இரத்தம் சிந்திய மண் என் பூஜை அறையில் உள்ளது என சீமான் பேசியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

பரவிய செய்தி

பிரபாகரன் இறந்து கிடந்த இடத்தில் இரத்தம் சிந்திய மண் ஒரு வெங்கல செம்பில் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்துள்ளேன். – பிரபாகரன் மகன் சீமான்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் என்னோடு தொடர்பில் இருக்கின்றனர் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

Advertisement

Archive link 

இதனைத் தொடர்ந்து பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவ தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. தனது மகனைப் பலி கொடுத்து விட்டு தலைவர் மட்டும் தப்பிச்  சென்றிருக்க மாட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்திருந்தார்.

https://twitter.com/SIVAKUMAR_KAVI/status/1629834164563480577

Archive link 

இந்நிலையில், பிரபாகரன் இறந்த இடத்தில் இரத்தம் சிந்திய மண்ணை ஒரு வெண்கல கலயத்தில் தனது பூஜை அறையில் வைத்துள்ளதாக சீமான் பேசியுள்ளார் என 21 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

உண்மை என்ன ? 

சீமான் பேசிய முழு வீடியோ நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் உள்ளது. 2023 பிப்ரவரி 13ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசிய வீடியோ கடந்த 14ம் தேதி அவர்களது யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

Archive link 

அவ்வீயோவில் 17வது நிமிடத்திற்கு மேல் அவர் பேசுகையில், “11 வயது பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த பையன், காணாமல் போய்விடுகிறான். தங்கச்சி அழுகிறாள், அண்ணனைக் காணவில்லை என்று. பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கேட்கிறார்கள். அவன் அப்போதே சென்றுவிட்டான் எனப் பதில் வருகிறது. 

உடன் படித்த நண்பர்கள், ஆசிரியர்கள், சொந்தக்காரர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கிறார்கள். 11 வயது பையனைக் காணவில்லை. மூன்று நாட்கள் கழித்து அந்த சிறுவன் வருகிறான். தங்கை ஓடிச் சென்று கட்டித் தழுவி அண்ணா என்று அழுகிறாள். அப்பா அம்மா வந்து அழுகிறார்கள். அவன் எதுவும் சொல்லவில்லை. ஒரு கலயம் வைத்திருக்கிறான். அந்த கலயத்தின் மீது ஒரு துணியை வைத்துக் கட்டி வைத்துள்ளான்.

தங்கையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு, கலயத்தை திறந்து காட்டுகிறான். அதற்குள் இரத்தம் தோய்ந்த சிவந்த மண்ணை அள்ளி வைத்துள்ளான். ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சுட்டுச் செத்த மக்கள் சிந்திய இரத்தத்தில் சிவந்த இடம் இருக்குல. அந்த மண்ணை அள்ளி அதில் வைத்திருக்கிறான். 

“இது நம் மக்கள் சிந்திய இரத்தம் தங்கச்சி, இதற்கு வெள்ளையர்கள் எனக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்”. அந்த சிறுவன்தான் என் அன்புத் தம்பி, தங்கைகளே… 22 வயதில் இந்த மண்ணின் விடுதலைக்காகத் தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன் பகத் சிங் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

அதே மாதிரி என் இன மக்கள், என் தாய் நிலம் தமிழ் ஈழத்தில் சிந்திய ரத்தம், அந்த மண்… சிவந்த மண்… என் வீட்டுப் பூஜை அறையில் இன்றும் இருக்கிறது. ஒரு வெண்கல கலயத்திலே வைத்திருக்கிறேன். அந்த வஞ்சம், அந்த வன்மம், அந்த வீரம் பகத் சிங்கிற்கு இருந்தது. இந்த பிரபாகரனின் மகன் சீமானுக்கு இருக்கிறது. வஞ்சம் வச்சி பழி தீர்க்கல… நான் பிரபாகரன் மகன் இல்லடா…” எனப் பேசி இருக்கிறார். 

தமிழ் ஈழத்தில் மக்கள் சிந்திய மண்ணை தனது பூஜை அறையில் வைத்துள்ளதாகச் சீமான் பேசியதை எடிட் செய்து, பிரபாகரனின் இரத்தம் சிந்திய மண்ணை தான் வைத்திருப்பதாகப் பேசியுள்ளார் எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படம் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம் !

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் பேசியதை தொடர்ந்து, பிரபாகரன் வயதான தோற்றத்தில் இருப்பது போன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன. அப்புகைப்படங்கள் குறித்த உண்மைத் தன்மையினை யூடர்ன் செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : ஓபிஎஸ் தாயார் இரங்கல் பதிவிற்கு ஓபிஎஸ் மனைவியின் படத்தைச் சீமான் பதிவிட்டதாகப் பரவும் போலிச் செய்தி !

முடிவு : 

நம் தேடலில், விடுதலை புலிகள் பிரபாகரனின் இரத்தம் சிந்திய மண்ணை சீமான் தனது பூஜை அறையில் வைத்திருப்பதாகப் பேசியுள்ளார் எனப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. ஈழ மக்களின் இரத்தம் சிந்திய மண்ணைத்தான் தனது பூஜை அறையில் வைத்திருப்பதாகச் சீமான் பேசி இருப்பதை அறிய முடிகிறது.

Update : 

Twitter link

கட்டுரையில், வீடியோவின் ஆண்டு 2023 என்பதற்கு பதிலாக 2022 குறிப்பிடப்பட்டது. அது மாற்றப்பட்டு விட்டது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button