கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் விபூதியை அழித்து Behindwoods செய்தி வெளியிட்டதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஏர்திங்ஸ் எனும் புகழ்பெற்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஆர்.பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது ஆச்சரியப்பட வைத்தது. சிறுவன் பிரக்ஞானந்தாவின் வெற்றி நாடு முழுவதும் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில், பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பற்றி, ” உலக செஸ் சேம்பியனையே 39 மூவ்-ல் முடித்துவிட்ட தமிழக சிறுவன்..! ” எனும் தலைப்பில் Behindwoods வெளியிட்ட செய்திக் கட்டுரையில் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் விபூதி இடம்பெறவில்லை என்றும், விபூதியை போட்டோஷாப் மூலம் அழித்து Behindwoods செய்தி வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
Behindwoods வெளியிட்ட செய்திக் கட்டுரையில் உள்ளே பிரக்ஞானந்தா விபூதியுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றதைப் பார்க்க முடிந்தது.
அதுமட்டுமின்றி, செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பற்றிய செய்தியை Behindwoods வெளிடுவதற்கு முன்பாக Ndtv-வின் விளையாட்டு பிரிவில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அந்த செய்தியில், Behindwoods பயன்படுத்திய பிரக்ஞானந்தாவின் முழு படம் இடம்பெற்றுள்ளது. அந்த படமும் விபூதி இன்றி இருப்பதை பார்க்கலாம். இப்படி முன்னணி ஆங்கில செய்திகள் பலவற்றில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
India does it! 4:2 win against China, four draws & two wins on U20 boards. 15-year old Praggnanandhaa R was on the ropes, but managed to turn the tables on Liu Yan & finish with a perfect 6/6 score. India takes first place in Pool A & is the first team to qualify to quarterfinals pic.twitter.com/eVOW0IH6IQ
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2020
எனினும், பிரக்ஞானந்தாவின் வைரல் புகைப்படத்தை யார் வெளியிட்டது என அறிவதற்கு அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஆகஸ்ட் 23-ம் தேதி சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட International Chess Federation(FIDE)-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பிரக்ஞானந்தாவின் இப்படத்தை பதிவிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், Behindwoods பிரக்ஞானந்தாவின் புகைப்படத்தில் நெற்றியில் இருந்த விபூதியை போட்டோஷாப் மூலம் அழித்து செய்தியில் பயன்படுத்தியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த புகைப்படம் 2020-ல் சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDE வெளியிட்ட உண்மையான புகைப்படமே. அதை தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.