முஸ்லீம் வியாபாரி ஜூசில் எச்சில் துப்பிக் கொடுப்பதாகத் தவறாகப் பரவும் சித்தரிப்பு வீடியோ !

பரவிய செய்தி
எங்கள் கலாசாரப்படி உணவில் எச்சில் துப்ப வேண்டும் என்று சொன்னால் இஸ்லாமிய நாட்டில் எதிர்வினை.. பிறகு என்ன அதேதான்..
மதிப்பீடு
விளக்கம்
சாலையோர வாகனத்தில் கடை நடத்தி வரும் முஸ்லீம் வியாபாரி ஒருவர் ஜூசை வாடிக்கையாளரிடம் கொடுப்பதற்கு முன் அதில் எச்சில் துப்புவது போன்றும், கடைக்காரரின் செயலால் கோபமடைந்த வாடிக்கையாளர் அங்கிருந்த பழங்களால் அவரைத் தாக்குவதையும் 26 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Muslim shopkeeper serves a glass of juice to a customer after adding his spit. Got the perfect response. This spitting thing is not a traditional Islamic ritual. It is a 20th century invention by illiterate clerics wanting to become holier than the Saudis. pic.twitter.com/n39TxdgB7D
— Rakesh Krishnan Simha (@ByRakeshSimha) September 20, 2023
இஸ்லாமிய நாட்டில் ஒரு கடைக்காரர் வாடிக்கையாளருக்கு ஜூசை வழங்குவதற்கு முன்பு அவர்களின் பண்பாடான எச்சில் துப்பும் சம்பவம் எனக் கூறி இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரலான வீடியோவில் காணப்படும் அரபு வார்த்தைகளை கூகுள் லென்ஸைப் (Google Lens) பயன்படுத்தி மொழிபெயர்த்த போது, அந்த வீடியோவில் ‘இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் தேர் அபு ஜுபைதாவின் பிராங்க் (Prank)’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
வைரல் வீடியோவின் கீஃப்ரேம்களை வைத்து தேடும்போது, யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இதே வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பதிவுகள் அனைத்திலும் தேர் அபு ஜூபைதாவின் பிராங்க் வீடியோ (Prank Video) என்றே குறிப்பிட்டுள்ளதை காண முடிந்தது.
மேலும் தேடுகையில், இவ்வீடியோ டிக்டாக்கில் வைரலாக இருப்பதைக் கண்டோம். வைரல் வீடியோ 25 வினாடிகள் நீளம் மட்டுமே, ஆனால் இக்காட்சிகளைக் கொண்ட 1:47 நிமிட நீளமுள்ள சில TikTok வீடியோக்களும் உள்ளன.
TikTok இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், நாங்கள் வீடியோவைப் பதிவிறக்கம் செய்து பார்த்த போது, ஆரம்பத்தில் வைரல் செய்யும் காட்சியை காட்டுகிறது, பின்னர் உணவு டிரக்கின் உள்ளே வைக்கப்பட்ட கேமராவை காண்பிக்கின்றன. முந்தைய பகுதியில் தான் சண்டையிட்ட நபருடன் வாடிக்கையாளர் சிரித்து உரையாடும் காட்சிகளையும் வீடியோவில் காணமுடிகிறது.
மேலும் படிக்க : எச்சில் துப்புவதே ஹலால் உணவு முறை என தமிழ்நாடு நீதிமன்றம் கூறியதாகப் பரவும் வதந்தி!
முடிவு :
நம் தேடலில், முஸ்லீம் கடைக்காரர் வாடிக்கையாளருக்கு ஜூசில் எச்சில் துப்பிக் கொடுப்பதாகப் பரப்பப்படும் வீடியோ உண்மையானது அல்ல, அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.