பெரம்பலூர் பியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கியவருக்கு திமுகவில் எம்எல்ஏ சீட்டா ?

பரவிய செய்தி
பெரம்பலூர் திமுக வேட்பாளர் பியூட்டி பார்லரில் பெண்ணை அடித்து உதைத்து கட்சியின் கோட்பாட்டை காப்பாற்றிய உடான்ஸ் பிறப்பு
மதிப்பீடு
விளக்கம்
பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் பெண்ணை அடித்து உதைத்த திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாக ட்விட்டர், முகநூல் உள்ளடவையில் வைரல் செய்யப்பட்டு வரும்பதிவுகளைப் பார்க்க நேரிட்டது.
பெரம்பலூர் பியூட்டி பார்லரில் பெண்ணை அடித்து உதைத்து கட்சியின் கோட்பாட்டை காப்பாற்றிய நபருக்கு MLA சீட் வழங்கி கௌரவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின் 😡
— Kanna Pandiyan SKP (@KannaPandiyaSKP) March 12, 2021
உண்மை என்ன ?
2018-ம் ஆண்டு செப்டம்பரில் பெரம்பலூரில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் என்பவர் பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை அடித்து, உதைத்து கடுமையாக தாக்கிய சிசிடிவி வீடியோ காட்சியால் அவர் கைது செய்யப்பட்டார். அந்நேரத்தில், அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக அறிவித்து இருந்தது.
எனினும் இச்சம்பவம் நடந்து சில மாதங்களில், பியூட்டி பார்லர் சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும், அதனால் அவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படுவதாக முரசொலியில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆனால், அவருக்கு எம்எல்ஏ சீட் கொடுக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. 2021 சட்டசபைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியலில் செல்வகுமார் என்ற பெயரில் யாரும் இல்லை. பெரம்பலூர் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரின் பெயர் பிரபாகரன்.
முடிவு :
நம் தேடலில், பெரம்பலூர் பியூட்டி பார்லரில் பெண்ணை அடித்து உதைத்தவர் எம்எல்ஏ வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளதாக பரவும் தகவல் தவறானது. திமுக சார்பில் பெரம்பலூரில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் பிரபாகரன் என அறிய முடிகிறது.