குடியரசுத்தலைவருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பா ?

பரவிய செய்தி

கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் படிக்கட்டில் அமர்ந்து பூஜை செய்த பாரத நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

மதிப்பீடு

விளக்கம்

ராஜஸ்தானில் மாநிலத்தில் புஷ்கர் பகுதியில் உள்ள பிரம்மன் கோவிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படாததால் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து பூஜை செய்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

மறுபுறம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியரசுத்தலைவரை அனுமதிக்காத கோவில் அர்ச்சகரை ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். குடியரசுத் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தலைவரிடமே தீண்டாமையை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், நிகழ்ந்தது என்னவென்று முழுவதும் தெரியாமல் பலரும் கருத்து கூறுவது தவறான ஒன்றாகும். ஆம், இது முற்றிலும் வதந்தி செய்தியே..!

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக ராஜஸ்தான் சென்றுள்ளார். அவர் தனது குடும்பத்தினருடன் அஜ்மீர் அருகே புஷ்கர் பகுதியில் உள்ள பிரம்மா கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அனுமதி மறுத்தால் பிரம்மா கோவிலின் படிக்கட்டில் அமர்ந்து பூஜை செய்ததாய் கூறுவது தவறு. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் படிக்கட்டுகளில் அமர்ந்து இருப்பது போன்ற படங்களை கோவிலில் எடுத்ததாக ஊடகத்தில் கூறியுள்ளனர்.

பிரம்மா கோவில் மற்றும் புஷ்கர் ஏரி ஆகிய இரு இடங்களுக்கும் குடியரசுத்தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர். புஷ்கர் ஏரியில் அமர்ந்து பூஜை செய்ததை கோவில் படிக்கட்டு என தவறாக வெளியிட்டு உள்ளனர். மேலும், பிரம்மா கோவிலின் படிக்கட்டுக்கு முன்பாகவே பிரத்யேகமாக மேடை அமைத்து சிறப்பு பூஜை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர் கோவில் நிர்வாகம். அதில் அவர்களுக்கு முன்பாக இருக்கும் சிறப்பு ஏற்பாடுகளையும், கோவில் அர்ச்சகர்களையும் காண முடிகிறது.

இது குறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில், “ பிரம்மா கோவிலுக்கு குடியரசுத்தலைவரின் வருகை பற்றி அறிந்து, அவர்களுக்கு கோவில் கர்ப்ப கிரகத்தில் அனைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், ஒரு நாளைக்கு முன்பாக குடியரசுத்தலைவரின் மனைவியால் படிக்கட்டுகளில் ஏற முடியாத காரனத்தினால் படிக்கட்டில் பூஜை செய்ய ஏற்பாடுகளை செய்யுமாறு தகவல் வந்தது. மேலும், பல முறை குடியரசுத்தலைவரை அழைத்தும் மறுத்து விட்டார்.பின்னர் அவரது மகளை மட்டும் கர்ப்ப கிரகத்தில் தரிசனம் செய்ய அனுப்பி வைத்திருந்தார் “ என்று தெரிவித்துள்ளார்கள்.

குடியரசுத்தலைவரின் பத்திரிகை செயலாளர் அளித்த விளக்கத்தில், “ குடியரசுத்தலைவரின் புஷ்கர் வருகை குறைந்த நேரம் மட்டுமே, காரணம் மதியம் மும்பைக்கு விமானத்தில் செல்ல வேண்டி இருந்தது. இருந்தபோதிலும், மீண்டும் மீண்டும் மாநில அரசு, கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் வேண்டுகோள் வைத்தனர். ஆனால், முழு தரிசனத்திற்கு அவருக்கு நேரமில்லை. இது முற்றிலும் அவரின் முடிவு ஆகும். மற்றபடி வேறு எக்காரணமும் இல்லை “ என்று தெரிவித்துள்ளார்.

கோவில் அர்ச்சகர் :

குடியரசுத்தலைவருக்கு கோவிலில் அனுமதி அளிக்கவில்லை என வெளியாக தகவலை அறிந்து வெளிமாநில நபர் அக்கோவிலின் அர்ச்சகரை தாக்கியதாகவும் தவறான செய்திகள் வெளியாகின்றன.

கோவிலுக்குள் சென்ற நபர் அர்ச்சகரை தாக்கியது உண்மை. இதையடுத்து அந்த நபரை போலீஸ் பிடித்து விசாரித்த போதே அவர் அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் தெரிய வந்தது. இரண்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே உண்மை.

குடியரசுத்தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்ற தவறான செய்தியை பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button