This article is from Aug 19, 2021

ஆகமத்தை, இறைவனை மதிக்கவில்லை! பழைய புகைப்படத்தை பகிர்ந்து பொங்கும் காயத்ரி ரகுராம்

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளித்து கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

ஆனால், அதற்கு எதிரான கருத்துக்களும், பதிவுகளும் சமூக வலைதளத்தை சுற்றி வருவதை பார்த்து இருப்பீர்கள். இந்நிலையில், அரசு அர்ச்சகர் பயிற்சி நிலையத்தின் நிலை என மதுரையில் உள்ள பயிற்சி நிலையத்தின் புகைப்படத்தை பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் மற்றும் கல்யாண் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

” இறைவன் மற்றும் ஆகமத்திற்கு அளிக்கப்படும் மரியாதையின் அளவு ” எனக் கூறி இப்புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். ” அரசு பயிற்சி நிலையம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என பாருங்கள் ” என இதே புகைப்படத்தை பலமுறை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது எனத் தெரிந்தே சிலர் இப்புகைப்படத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். புகைப்படத்தில் 2013-ல் கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தின் போஸ்டர்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. அந்த போஸ்டரிலேயே 2013 ஜனவரி தேதி இடம்பெற்றுள்ளதை பார்க்கலாம்.

2015-ம் ஆண்டு தி ஹிந்து இணையதளத்தில் வெளியான செய்தியில் இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது. புகைப்படத்திற்கு கீழே, 2013 ஏப்ரல் 29-ம் தேதி மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட 6 பயிற்சி நிலையங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஏன் இந்த நிலை ?

அரசு அர்ச்சகர் பயிற்சி நிலையத்திற்கு ஏன் இந்த நிலை என அறிந்து கொள்ள மதுரையில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் (அனைத்து சாதியினர்) வழக்கறிஞரிடம் பேசுகையில், ” சென்னை, மதுரை உள்பட 6 இடங்களில் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. நீங்கள் கூறும் பயிற்சி நிலையம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்து உள்ளது. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரிகள் சங்கம் வழக்கு தொடுத்து தடை வாங்கினர். 2007-08க்கு பிறகு பயிற்சி நிலையம் இயங்காமல் தான் இருந்துள்ளது. தற்போதுதான் மீண்டும் திறக்கலாம் என அறிவித்து இருக்கிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களிடம் பேசுகையில், ” 2007 ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட பயிற்சியில் அப்போது ஒரு பேட்ஜ் மட்டும் 207 பேர் பயிற்சி பெற்று இருந்தோம். ஆனால், மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரிகள் சங்கத்தினர் வழக்கு தொடுத்து பணி நியமனத்திற்கு தடை வாங்கினர். வழக்கு தொடர்பாக 2015-ல்  தீர்ப்பு வந்து விட்டது. ஆனால், 2007-08க்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள அர்ச்சகர் பயிற்சி நிலையம் இயங்காமல், பாழடைந்து போய் தான் இருக்கிறது. தற்போது மீண்டும் பயிற்சி நிலையத்தில் மாணவர்களை சேர்த்து  விரைவாக இயக்க உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் அந்த கட்டிடத்தை வேறு யாரும் பயன்படுத்தினார்களா எனத் தெரியவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.

2006-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு இதற்காக தமிழகத்தில் மதுரை உள்பட 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர வகுப்பைச் சேர்ந்த 207 பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றனர்.

ஆனால், இதை எதிர்த்து மீனாட்சி அம்மன் கோவிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கமும், தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்கால தடை வாங்கினார்கள். எனினும், அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கத்தை உருவாக்கி உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம். பயிற்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வேண்டி போராட்டங்களும் நடத்தி இருக்கிறார்கள். 2015-ல் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. எனினும், தீர்ப்பிற்கு பிறகு பணி நியமனம் மற்றும் பயிற்சியில் அப்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை.

தற்போது மீண்டும் ” அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ” எனத் திட்டத்தின் கீழ் பணிநியமன ஆணை வழங்கப்பட்டதால் மீண்டும் அரசு அர்ச்சகர் பயிற்சி மையங்கள் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முடிவு : 

நம் தேடலில், அரசு அர்ச்சகர் பயிற்சி மையத்தின் நிலை என பரப்பப்படும் புகைப்படம் 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தற்போது அப்புகைப்படத்தை தவறாக வைரல் செய்து வருகின்றனர்.

மேலும், 2007-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு பிறகு அந்த அர்ச்சகர் பயிற்சி மையம் இயங்காமல் இருந்து வருகிறது. அதன்பிறகு அந்த கட்டிடம் எதற்காக பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. தற்போது வரை இயங்காமல் இருக்கும் பயிற்சி மையத்தை தவறாக சித்தரித்து வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader