கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக்கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தாரா ?

பரவிய செய்தி
டெல்லி அரசு அதிரடி உத்தரவு அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது அப்படி இல்லை எனில் விளம்பரம் இருக்கும் சேனல்களில் கட்டணம் கேட்கக்கூடாது விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு கட்டணம் கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் இதை நாமும் வரவேற்போம் இதை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணவும்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல்கள் நடத்தி முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நிர்வாகம் மற்றும் கல்வி என குறிப்பிட்ட அளவிலான அதிகாரம் மட்டுமே டெல்லி அரசாங்கத்திற்கு உண்டு. மற்றவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனாலேயே, மத்திய ஆட்சியாளர்களுக்கும், டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்படும்.
டெல்லி போன்ற குறிப்பிட்ட அதிகாரம் மட்டுமே கொண்ட அரசால் இவ்வளவு பெரிய உத்தரவை பிறப்பிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற உத்தரவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும், செய்தியும் வெளியாகவில்லை.
இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கை அனைத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தொலைத்தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் கட்டண விவரங்களை நிர்ணயிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ ட்ராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
ட்ராய் அமைப்பு தன்னாட்சி அதிகாரம் கொண்டது மற்றும் மாநில அரசுகளால் அதன் மீது அதிகாரம் செலுத்த முடியாது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் அரசு கேபிள் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் கூட குறிப்பிட்ட சேனல்களின் ஒளிபரப்பை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமே தவிர, கட்டண சேனல்களில் விளம்பரமே செய்யக்கூடாது என தடை செய்ய முடியாது.
2019 பிப்ரவரி மாதம், ” நாடு முழுவதும் கேபிள் அல்லது டிடிஎச் மூலம் குறிப்பிட்ட சேனல்கள் தொகுப்பாக வழங்கப்படுகின்றன. அதில், தேவைப்படாத சேனல்களுக்கும் கூட சேர்த்து கட்டணம் செலுத்தப்படுகிறது. இனி விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே பணம் செலுத்தி பார்க்கும் முறை அமல்படுத்தப்படும் என ட்ராய் அறிவித்தது இன்று நடைமுறைக்கு வந்துள்ளதாக ” செய்திகளில் வெளியாகியது.
இதையடுத்தே, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி முதல்வர் கட்டண சேனல்களுக்கு எதிராக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதாக தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் அரசு வேலை என கெஜ்ரிவால் திட்டமா ?
இதற்கு முன்பாக, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க உள்ளதாகவும், இனி கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டுமே அரசு பணியில் இருக்க வேண்டும் என்கிற புதிய சட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிக்க உள்ளதாக வதந்தியைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், அனைத்து கட்டண சேனல்களிலும் விளம்பரம் இருக்கக்கூடாது, அப்படி இல்லை எனில் விளம்பரம் இருக்கும் சேனல்களில் கட்டணம் கேட்கக்கூடாது என டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தாக சுற்றி வரும் தகவல் முற்றிலும் வதந்தியே என அறிய முடிகிறது.