This article is from May 20, 2020

உபி-யில் பிரியங்கா காந்தி அனுப்பிய பேருந்துகளின் புகைப்படமா ?

பரவிய செய்தி

இது ரயில் அல்ல.!!  புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலநிலை சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியின் வாயிலாக கண்டு வருகிறோம்.

மார்ச் 16-ம் தேதி காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப 1000 பேருந்துகளை அனுப்ப உள்ளதாக அறிவித்தார். அவரால் அனுப்பப்பட்ட பேருந்துகளின் அணிவகுப்பு என இப்புகைப்படம் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019-ல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளா விழாவிற்கு அம்மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளின் அனுவகுப்பு என NDTV செய்தி கிடைத்தது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் நடைபெற்ற கும்பமேளா விழாவிற்காக 500 பேருந்துகளின் அணிவகுப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த பேருந்துகளின் அணிவகுப்பு சாக்சன் டோல் முதல் நவாப்கன்ஜ் டோல் பிளாசா வரை சுமார் 3.2கி.மீ தொலைவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக நீளமான பேருந்துகளின் அணிவகுப்பு என கின்னஸ் சாதனை படைத்தது.

பிரியங்கா காந்தி 1000 பேருந்துகள் ஏற்பாடு : 

மே 16-ம் தேதி காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்திக்கும் உத்தரப் பிரதேச மாநில அரசிற்கும் ஏற்பட்ட சவாலில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்வதாக பிரியங்கா காந்தி அறிவித்தார். இதையடுத்து, அம்மாநில அரசு தரப்பில் அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. இதற்காக பேருந்துகளின் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் தரப்பில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட பேருந்துகளின் பதிவு எண்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், அம்புலன்ஸ் உள்ளிட்டவையின் எண்களாக உள்ளதாகவும், சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என உத்தரப் பிரதேச அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், தவறான தகவலை அளித்ததாகக் கூறி பிரியங்கா காந்தி மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் குமார் லல்லு வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும் அரசு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு உபி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர், ” உத்தரப் பிரதேச அரசிற்கு பேருந்துகள் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் மாநில எல்லையில் சோதித்து பார்க்கவும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

மே 19-ம் தேதி வெளியான செய்தியில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகள் தயாராக இருப்பதாகவும், இன்று மாலை 5 மணிக்கு நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிக்கு வந்து சேரும் என உத்தரப் பிரதேச அரசுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நமது தேடலில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி அனுப்பிய 1000 பேருந்துகள் என வைரல் செய்யப்படும் புகைப்படம் தவறானது. எனினும், பிரியங்கா காந்தி புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகளை அனுப்பி வைப்பதாக கூறும் விசயத்தில் மாநில அரசிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்சனை நிலவுகிறது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader