பிரியங்கா காந்தி ஹத்ராசில் காங்கிரஸ் தலைவரை நடிக்க வைத்ததாக வதந்தி!

பரவிய செய்தி
காங்கிரஸ் தலைவரை ஹத்ராசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினராக பிரியங்கா நடிக்க வைத்தது அம்பலம் !
மதிப்பீடு
விளக்கம்
ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அக்டோபர் 3-ம் தேதி அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அங்கு பிரியங்கா காந்தி ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fervid Indian எனும் முகநூல் பக்கத்தில் பிரியங்கா காந்தி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் பெண் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றும், அக்கட்சியின் தலைவரை ஹத்ராஸ் பெண்ணின் உறவினரை போன்று நடிக்க வைத்து உள்ளதாக மீம் வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
இதே Fervid Indian எனும் முகநூல் பக்கம் இதற்கு முன்பாக பிரியங்கா காந்தி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் புகைப்படத்தில் இருக்கும் பெண் ” நக்சல் ” என மீம்ஸ் பரப்பி இருந்தனர். ஆனால், அது வதந்தியே என யூடர்ன் விவரித்து உண்மை எதுவென கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
விரிவாக படிக்க : ஹத்ராஸ் பெண் வீட்டில் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியது நக்சல் பெண்ணிற்கா ?
பிரியங்கா காந்தி ஆறுதல் கூறும் புகைப்படத்தில் இருக்கும் பெண் “நக்சல் பெண்ணும்” அல்ல, “காங்கிரஸ் கட்சியின் தலைவரும்” அல்ல. அவர் உயிரிழந்த பெண்ணின் தாயார் ஆவார். அக்டோபர் 3-ம் தேதி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ” Watch: Priyanka Gandhi consoles Hathras victim’s mother ” எனும் தலைப்பில் ஹத்ராஸ் இளம்பெண் வீட்டில் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறும் புகைப்படத்துடன் வீடியோ வெளியிட்டு உள்ளது.
ஹத்ராஸ் இளம்பெண் வீட்டில் உறவினராக நடித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் என பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் கோவா காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த பிரதிபா போர்கர் ஆவார். அவருடைய முகநூல் பக்கத்தின் முகப்பில் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
கோவா கமிட்டியின் சமூக ஊடகக் குழுவுக்கு பிரதிபா போர்கர் தலைமை தாங்குகிறார் என 2019 ஜனவரி 16-ம் தேதி www.heraldgoa.in இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஹத்ராஸ் இளம்பெண் வீட்டில் தங்கி இருந்த நக்சல் பெண் என வைரல் செய்யப்பட்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி பன்சால் ஆவார். ஹத்ராஸ் இளம்பெண் வீட்டிற்கு சென்றது குறித்து பன்சால் அளித்த ஊடகச் செய்தியை முந்தைய கட்டுரையில் விவரித்து இருந்தோம். தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், காங்கிரஸ் தலைவரை ஹத்ராசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினராக பிரியங்கா நடிக்க வைத்தது அம்பலம் எனப் பரவும் தகவல் வதந்தியே. பிரியங்கா காந்தி உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு ஆறுதல் கூறும் புகைப்படத்தை வைத்து தொடர்ந்து திட்டமிட்ட வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.