பத்திரிகையாளர் ஷூ பிரியங்கா கைக்கு ரகசியமாகக் கொடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
பிரியங்காவின் செக்யூரிட்டி ரகசியமாக அவரது கையில் செருப்பை கொடுக்கிறார். அதை பிரியங்கா கையில் வைத்த புகைப்படம் வெளி வருகிறது.
மதிப்பீடு
சுருக்கம்
பேரணியில் காயமடைந்த பத்திரிகையாளருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் உடன் இருந்தவர்கள் உதவிய இருவேறு காட்சிகளிலும் தானாகவே ஷூவை பிரியங்கா காந்தி கையில் எடுப்பது பார்க்க முடிகிறது.
விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை ஏப்ரல் 4-ம் தேதி ராகுல் காந்தி தாக்கல் செய்தார். அப்பொழுது, அவருடன் பிரியங்கா காந்தி, உம்மன்சாண்டி மற்றும் பலர் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தனது ஆதரவாளர்கள் உடன் ராகுல் காந்தி பேரணியாக சென்றார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூன்று பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். அதில், படுகாயமடைந்த பத்திரிகையாளர் ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்ற ராகுல் காந்தி மற்றும் அவர் உடன் இருந்தவர்கள் உதவிய சம்பவம் அனைத்து செய்திகளிலும் வெளியாகின.
இச்சம்பவத்தின் போது உடன் இருந்த பிரியங்கா காந்தி காயமடைந்தவரின் ஷூவை கையில் வைத்து இருக்கும் புகைப்படங்களும் செய்திகளிலும், தற்போது சமூக வலைதளங்களிலும் பகிரப்படுகிறது.
எனினும், காயமடைந்தவருக்கு உதவிய சம்பவம் நிகழ்ந்த போது பிரியங்காவின் செக்யூரிட்டி ரகசியமாக அவரது கையில் செருப்பை கொடுத்ததாகவும், அதை அவர் கையில் வைத்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள் செய்திகளில் பேசுப் பொருளாக மாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.
ஆனால், உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை வீடியோ காட்சிகள் மூலம் பார்க்கும் பொழுது பிரியங்கா காந்தி மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது புலப்படுகிறது.
Mathrubhumi news என்ற கேரளா செய்தியில் காயமடைந்த பத்திரிகையாளரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றும் பொழுது அருகில் இருந்த பிரியங்கா காந்தி ஷூவை தானாகவே தரையில் இருந்து எடுக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அப்பொழுது பின் நின்ற பாதுகாவலர் கை ஷூ அருகில் இருப்பதை காணலாம். அப்டங்களே பகிரப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே பிரியங்கா தரையில் இருந்து ஷூவை எடுத்து வைத்து இருந்தார் என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
அடுத்ததாக, ஷூவை செக்யூரிட்டி ரகசியமாக எடுத்துக் கொடுக்கிறார் என கூறுவது தவறு. ஸ்ட்ரக்சரை ஆம்புலன்ஸ் நோக்கி வரும் பொழுது கூட்டத்தில் பிரியங்கா காந்தி பின் இருந்த செக்யூரிட்டியின் கைப்பட்டு ஷூ தவறி கீழே விழுந்த உடன் மீண்டும் எடுத்து உள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட வீடியோவில் 0.22 நொடியில் அதனை காண முடிகிறது.
இதைத் தவிர, காயமடைந்த பத்திரிகையாளர் ரிக்ஸன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், பிரியங்கா காந்தி ஆம்புலன்சில் இருந்த தன்னிடம் ஷூவை எடுத்துக் கொடுத்ததாக பதிவிட்டு உள்ளார். மேலும், அவர் தன் கல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
அரசியலில் எதிர் கட்சியினர் மீது எதிர்ப்பு கொண்டு இருப்பது சகஜம். ஆனால், அதனை சரியான தகவல்கள், கருத்துகள் மூலம் எதிர்க்க வேண்டும். அதைவிடுத்து, தவறான தகவல்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது யாராக இருந்தாலும் தவறு தான்.