இந்தியாவிற்கு சிவிங்கிப் புலிகள் கொண்டு வரும் திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய மோடி ?!

பரவிய செய்தி

இக்கடிதம் சிவிங்கிப் புலிகள் திட்டத்தினை 2009ம் ஆண்டு தொடங்கியது பற்றியதாகும். நமது பிரதமர் பொய்ச் சொல்லும் நோயினை கொண்டவர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் வேலையாக இருந்ததினால் இக்கடிதத்தினை நேற்றைய தினமே உங்களிடம் காண்பிக்க முடியவில்லை.

சிவிங்கிப் புலிகள் திட்டத்திற்காக 2010, ஏப்ரல் 25ம் தேதி கேப்டவுன் என்ற பகுதிக்கு நான் சென்றிருந்தேன். இந்தியப் பிரதமர் அரசு இயந்திரம் என்பது ஒரு தொடர் அமைப்பு என்பதினை ஒப்புக்கொள்வதே கிடையாது. அவர் இன்று அரங்கேற்றி இருக்கும் நாடகமானது தேசத்திலுள்ள பிற பிரச்சனைகளைத் திசைதிருப்ப மேற்கொள்ளும் மற்றுமொரு யுக்தியாகும்.

2009-11 கால கட்டத்தில் பனாமா மற்றும் சரிஸ்கா ஆகிய பகுதிகளுக்கு  முதன் முதலாகப் புலிகள் இடமாற்றப்பட்டன. இத்திட்டம் அழிவை உண்டு செய்யும் என தீர்க்கதரிசிகள் பலபேர் கூறினர். அவர்கள் அவ்வாறு கூறியது தவறென பின் நாட்களில் உணர்ந்தனர். இதே போலச் சிவிங்கிப் புலிகள் திட்டத்தின் போதும் பலர் பேசினர். இத்திட்டத்தில் பல முதன்மையான வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். இத்திட்டம் சிறப்பாக அமைய விரும்புகிறேன் – ஜெய்ராம் ரமேஷ்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை குனோ தேசிய பூங்காவின் வனப்பகுதியில் விடுவித்தார்.

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனமானது வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளை மக்கள் தங்களின் வாழ்விடமாக மாற்றியதின் விளைவாக 1952ம் ஆண்டு முழுமையாக அழிந்துவிட்டது. அதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்டு இந்திய வனப் பகுதிகளில் விட திட்டமிடப்பட்டது. 

சிவிங்கிப் புலிகள் காட்டில் விடுவது ஒரு சாதாரண நிகழ்வாகும். ஆனால் அது  நரேந்திர மோடியின் பிறந்தநாள் அன்று இயல்பாக நிகழ்வது போல அமைக்கப்பட்டது. இதனால் இந்நிகழ்வு தேசிய அளவில் பேசுபொருளானது. 

இந்நிகழ்வு குறித்து, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுற்றுசூழல் மற்றும் வனப்பகுதி துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளளர். அதில் சிறுத்தை திட்டமானது 2009ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்ன ?

காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியினை அமைத்தது. அப்போது ஜெய்ராம் ரமேஷ் ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்திற்காக 2010ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார். 

அன்றைய தினங்களில் தென் ஆப்ரிக்காவின் நமீபியா மற்றும் கென்யாவிடம் இருந்து 3 ஆண்டுகளில் 18 சிவிங்கிப் புலிகளை இந்தியா கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பற்றி புலிகள் பாதுகாப்பு குறித்து பேசுபவர்கள் எதிர்ப்பு தெரித்தனர்.  

“புலிகளையே “பார்த்துக்கொள்ள முடியாதபோது சிவிங்கிப் புலிகளை எப்படி பார்த்து கொள்வீர்கள்? என கேட்கிறார்கள்”, “புலிகள் காடுகளின் அடையாளமாக இருப்பதை போல, சிவிங்கிப் புலிகள் புல்வெளி பகுதியின் அடையாளமாக இருக்கும் என ஜெய்ராம் ரமேஷ்  பேசியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு சிவிங்கிப் புலிகள் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிராக Centre for Environment Law என்ற அமைப்பினால் உச்ச நீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அப்போது சுற்றுச்சூழல் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்குபவரான பி.எஸ்.நரசிம்மா இத்திட்டத்தினை எதிர்த்தார். 2012 மே 8ம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் அரசானது தன்னிச்சையாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டுள்ளது என 2013, ஏப்ரல் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி இத்திட்டம் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றும், செய்யப்பட்ட ஆய்வுகள் குறித்த தரவுகள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் 2013ல் வழங்கிய தீர்ப்பு குறித்து 2017ம் ஆண்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மறுஆய்வு மனுவினை தாக்கல் செய்தது. அதன்படி  வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் (NBWL) ஆலோசனையுடன் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2020, ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இந்திய அரசு சோதனை அடிப்படையில் சிவிங்கிப் புலிகளை கொண்டு வரலாம் என தீர்ப்பினை வழங்கினார். 

அந்த தீர்ப்பின் அடிப்படையில் தற்போது நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் மத்திய பிரதேசத்திலுள்ள குனோ தேசிய பூங்காவின் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டம் குறித்து காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பது உண்மை என அறிய முடிகிறது.

சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டம் 2009 காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும். பல்வேறு சட்ட சிக்கல்கள் 2020ம் ஆண்டு நீங்கியதை தொடர்ந்து 2022, செப்டம்பரில் சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader