காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி, அதிமுக ஆட்சியில் வந்த செய்தியை திமுக எனப் பரப்பி வருகிறார்கள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திமுக ஆட்சியில் நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என அளித்த அறிக்கையை பார்த்த உலக வங்கி அதிர்ச்சி அடைந்ததாக தினகரன் நாளிதழின் செய்தி பக்கம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
திமுக ஆட்சியைக் குறிப்பிட்டு பரப்பப்படும் செய்தியில் உள்ள தலைப்பை வைத்து தேடுகையில், கடந்த 2017 ஜூன் 12-ம் தேதி தினகரன் இணையதளத்தில் இச்செய்தியானது கிடைத்தது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.
தினகரன் செய்தியில், ” நீர்வள நிலவளத்திட்ட பணிகள் ஆய்வு செய்யவும், கூட்டம் நடந்த போது வழங்கிய காபி, மிக்சர் உள்ளிட்ட செலவுகள், அறிக்கை தயாரிக்க ஆன செலவு மட்டும் ரூ.47 கோடி என்று தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பார்த்த உலக வங்கி அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் 2007 முதல் பொதுப்பணித்துறை மூலம் நீர்வள, நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாசன வசதிகளை ஏற்படுத்தி, விவசாய தொழிலை நவீன மயமாக்குவது, நீர்வளத்தை பாதுகாப்பது, நீர்வள சேமிப்பை அதிகரிப்பது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தில் பொதுப்பணித்துறை மட்டுமின்றி வேளாண், மீன்வளம் உள்ளிட்ட 8 அரசு துறைகளும் இத்திட்டத்தில் இடம்பெற்றன. இத்திட்டம் மூலம் ரூ.2,544 கோடி செலவில் பல்வேறு மாவட்டங்களில் நீர்வள மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்காக கடனுதவி பெறப்பட்டது. இத்திட்டம் கடந்த 2015 ஜூன் மாதத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக ரூ.2,950 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் திட்ட பணி தொடர்பாக நடைபெறும் அதிகாரிகள் கூட்டம் மற்றும் விவசாயிகள் கூட்டங்கள் தொடர்பான செலவு குறித்து, அதாவது டீ, டீபன் உள்ளிட்ட செலவுகளை சேர்த்து ஆகும் செலவு அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
அதாவது இந்த திட்டம் செயல்படுத்தப்படும் 7 ஆண்டுகளுக்கு சுமார் ரூ.47 கோடி வரை செலவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது. இந்த அறிக்கையைப் பார்த்த தமிழக அரசு அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்து உலக வங்கிக்கு அனுப்பி வைத்தது. மொத்தம் ரூ.3,042 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
ஆனால், இந்த அறிக்கையை பார்த்ததும் ஆய்வு செய்யவும், கூட்டம் நடத்தும்போது காபி, மிக்சர், தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.47 கோடி செலவாகும் என்ற அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த உலக வங்கி குழுவினர் இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் பயந்து போன அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்யவும், கூட்டம் நடத்தவும் ஆகும் செலவை அறிக்கையாக தயாரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ” என வெளியாகி இருக்கிறது.
நீர்வளத் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்களுக்கான காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி: செய்தி – நமது ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதா? முழுநேரமும் இதே வேலையாக இருந்தால் இவ்வளவு செலவு ஆகாதா? pic.twitter.com/SKfcoyxUzD
— Dr S RAMADOSS (@drramadoss) June 19, 2018
2018 ஜூன் 19-ம் தேதி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ” நீர்வளத் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்களுக்கான காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி: செய்தி – நமது ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதா? முழுநேரமும் இதே வேலையாக இருந்தால் இவ்வளவு செலவு ஆகாதா? ” எனக் கூறி இதே செய்தித்தாள் பக்கத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவி ரூ.47 கோடி என அளித்த அறிக்கையை பார்த்த உலக வங்கி அதிர்ச்சி அடைந்ததாக பரப்பப்படும் செய்தி தவறானது. பரப்பப்படும் தினகரன் செய்தி 2017-ல் அதிமுக ஆட்சியில் வெளியானது. பழைய செய்தியை தற்போது தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.