மதுவிலக்கிற்காக இபிஎஸ் உடன் இணைந்து போராட தயார் : எம்.பி திருமாவளவன் பேச்சை திரித்து வெளியிட்ட நியூஸ் 18 !

பரவிய செய்தி
எடப்பாடியார் அவர்களுடன் இணைந்து போராட தயார், மது விற்பனையை அரசு கண்டும் காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது – திருமாவளவன்
மதிப்பீடு
விளக்கம்
மே 13-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சுற்றியுள்ள எக்கியார்குப்பம் என்ற மீனவ குப்பத்தைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தியதில் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில், சிகிச்சைப் பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மொத்தமாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
எனவே தற்போது தமிழ்நாட்டில் நிகழும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக 4 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதற்கு காரணமான கள்ளச்சாராயம் விற்ற அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இன்றும் விற்கப்பட்டு வரும் நிலையைப் பார்க்கும் பொழுது, அரசு மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது என்றும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்த விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “மதுவிலக்குக்கு ஆதரவாக ஈபிஎஸ் போராடினால் நாங்களும் இணைந்து போராட தயார்; மது விற்பனையை அரசே கண்டும், காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது; மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளச்சாராய ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” எனக் கூறியதாக நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதனை அதிமுக மற்றும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடியார் அவர்களுடன் இணைந்து போராட தயார்,
மது விற்பனையை அரசு கண்டும் காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
– @thirumaofficial pic.twitter.com/qCTmBNw1oV
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) May 16, 2023
Just One day ago @VanathiBJP akka had suggested something similar ! pic.twitter.com/Os0AanBqSE
— karthik gopinath (@karthikgnath) May 16, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்தும், இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள நியூஸ் கார்டு குறித்தும் ஆய்வு செய்து பார்க்கையில், இன்று விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வழங்கிய பேட்டியின் வீடியோ கிடைத்தது.
புதிய தலைமுறை வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் 57:07 நிமிடங்களில், கடந்த ஆட்சிகாலத்தில் மதுவுக்கு எதிராக நிறைய போராட்டங்கள் கூட்டணி கட்சிகள் சார்பாக நடந்திருப்பதாகவும், ஆனால் இப்போது கூட்டணி கட்சியில் இருப்பதால் யாரும் குரல் கொடுப்பதில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் சொல்லியிருக்கிறார் என்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு எம்.பி திருமாவளவன், “இப்போது நாங்கள் செய்வது என்ன? கூட்டணிக் கட்சியில் இருந்து தானே குரல் கொடுக்கிறோம், மதுவிலக்கை அமல்படுத்தவும் சொல்கிறோம்.
மேலும் மற்ற கட்சிகள் மீது அவர் குற்றச்சாட்டை வைப்பது மறுபுறம் இருக்கட்டும். எதிர்கட்சியாக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மதுவிலக்கிற்காக என்ன போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? நாங்கள் இதற்கு போராட வேண்டும் தான், இல்லை என்று சொல்லவில்லை. அவ்வப்போது எங்கள் கருத்துகளைப் பதிவு செய்து கொண்டே வருகிறோம். ஆனால் எதிர்கட்சியாக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மதுவிலக்கை அமல்படுத்தச் சொல்லி போராட்டம் நடத்துவார் எனில் அவரோடு சேர்ந்து நாங்கள் குரல் கொடுக்க தயாராக இருக்கிறோம்.” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதில், எதிர்கட்சியாக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மதுவிலக்கிற்காக என்ன போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? என திருமாவளவன் எழுப்பிய கேள்வியை நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி குறிப்பிடவே இல்லை.
மேலும், நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் இருப்பது போன்று “மது விற்பனையை அரசே கண்டும் காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது” என்று அவர் நேர்காணலில் கூறவில்லை. மாறாக தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார், உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கியிருக்கிறார். சிகிச்சைப்பெற்றுக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50,000 இழப்பீடு வழங்க ஆணையிட்டிருக்கிறார் என்பது ஆறுதலை அளிக்கிறது என்றாலும் இந்தப் பிரச்சனைக்கு நிரத்தர தீர்வு காண வேண்டும்.” என்று அவர் பேசியிருப்பதையே காண முடிந்தது.
இது தொடர்பாக மற்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டுகளையும் கீழே காணலாம்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மதுவை ஒழிப்பதற்காக போராட்டம் நடத்தியிருக்கிறாரா? இனி அவர் மதுவை ஒழிக்க போராட்டம் நடத்துவார் என்றால் அவரோடு சேர்ந்து நாங்கள் குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று அவர் பேசிய கருத்துகளை நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் பொதுமக்களின் பார்வைக்கு தவறாக வழிநடத்தி செல்கிறது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், மதுவிலக்குக்காக இபிஎஸ் போராடினால் இணைந்து போராட தயார், மது விற்பனையை அரசே கண்டும் காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என எம்.பி திருமாவளவன் கூறியதாக நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் இருப்பவை அவர் கூறிய கருத்தை தவறாக மாற்றி வெளியிட்டு உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.