PSBB துரோணாச்சார்யாஸ் குரூப் சாட் என பரவும் புகைப்படம் உண்மையா ?

பரவிய செய்தி
PSBB Dhronacharyas எனும் வாட்ஸ் அப் குழுவில், ஆசிரியர் ராஜகோபாலன் பற்றி நடைபெற்ற உரையாடல்..
மதிப்பீடு
விளக்கம்
பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, PSBB Dhronacharyas எனும் வாட்ஸ் அப் குழுவில், ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் பற்றி நடைபெற்ற உரையாடல் என ஒரு ஸ்க்ரீன்ஷார்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
அதில், முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் குறித்தும், பாஜக குறித்தும் பேசப்பட்டதாக இடப்பெற்று இருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
FotoForensics எனும் இணையதளத்தில், வைரல் செய்யப்படும் ஸ்க்ரீன்ஷார்ட் மற்றும் எங்கள் மாதிரி வாட்ஸ் அப் சாட் ஸ்க்ரீன்ஷார்டை பதிவேற்றி பார்க்கையில் இரண்டிற்கும் வேறுபாடுகள் இருப்பதை அறிய முடிந்தது. எனினும், வெவ்வேறு இடங்களில் மாறியதால் ஏற்படும் தரம் குறைவு அல்லது கிராப் செய்த காரணத்தினாலும் கூட வைரல் ஸ்க்ரீன்ஷார்ட் உடையது Pixel மாறி இருக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது.
ஆனால், மேற்காணும் வாட்ஸ் அப் சாட் ஸ்க்ரீன்ஷார்ட் புகைப்படத்தில், ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வெளியான புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டை முதலில் பதிவிட்டு இருக்கிறார்கள். அது பதிவிடப்பட்டது 15.29(3.29) மணி எனக் காண்பிக்கிறது. ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்கப்பட்ட போது செல்போனில் உள்ள நேரம் 3.38 எனக் காண்பிக்கிறது. ஆனால், புதியதலைமுறையின் முகநூலில் 16.12(4.12) மணிக்கும், ட்விட்டரில் 16.13(4.13) மணிக்கே நியூஸ் கார்டு பதிவிட்டதாகக் காண்பிக்கிறது. சுமார் 40 நிமிட இடைவெளி இருக்கிறது.
வாட்ஸ் அப் சாட் 24 மணி நேர முறையிலும், செல்போனில் காண்பிப்பது 12 மணி நேர முறையிலும் இருக்கிறது. வாட்ஸ் அப் செயலியில் 24 மணி நேர முறையை அமைக்க முடியும் என்றாலும், செல்போனில் காண்பிக்கும் நேர முறையில் 3.38 என மட்டுமே காண்பிக்கிறது, AM அல்லது PM என எதுவும் இடம்பெறவில்லை.
அதிலுள்ள, வாட்ஸ் அப் ஆடியோ icon சதுர வடிவில் இருக்கிறது. அப்டேட் செய்த வாட்ஸ்அப் சேட்டில் ஆடியோ icon வட்ட வடிவில் வருகிறது. அதேபோல், குரூப் கால் icon இல்லை மற்றும் குரூப் உறுப்பினர்கள் பெயர்கள் ஸ்க்ரோல் ஆகிறது. தற்போதுள்ள வாட்ஸ் அப்பில் உறுப்பினர்கள் பெயர்கள் ஸ்க்ரோல் ஆவதில்லை. மேலும், ஆடியோ கோப்பு பதிவாகும் விவரம் இடம்பெறவில்லை.
இது அப்டேட் செய்யப்படாத பழைய வாட்ஸ் அப் செயலியாக இருக்கக்கூடும் என கேள்வி எழுப்பினாலும், ஆசிரியர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் சில ஆண்டுகளுக்கு முந்தைய வாட்ஸ் அப் பயன்பாட்டை அப்டேட் இல்லாமல் தொடர்வது சாத்தியமில்லை.
ஒரு வாட்ஸ் அப் குழுவில் ஒரே நபர் தொடர்ச்சியாக பேசுகையில் லிங்க், ஆடியோ, வீடியோ போன்றவை அனுப்பும் போதே இருமுறை அவர்களின் பெயர் இடம்பெறும், மெஜேஜ்(Text) அனுப்பும் போது இரண்டாவதாகவும் பெயர் வராது.
இந்த வாட்ஸ் அப் சாட் உடைய ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என அறிய முடியவில்லை. குறிப்பாக, மூன்று பேர் பேசியது மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அவர்களை தவிர்த்து பலரும் அந்த குழுவில் இருக்கிறார்கள். அதன்பிறகு பேசியவர்கள் பற்றி எதுவும் இல்லை.
மேலும் படிக்க : PSBB பள்ளியின் சாதிய மனநிலை, பாலியல் குற்றச்சாட்டு – கொதிக்கும் இணையம்
கூடுதல் தகவல் :
நமது கட்டுரை குறித்து கமெண்ட்களில், அவர்கள் வாட்ஸ் அப் அப்டேட் செய்தாக வேண்டிய கட்டாயமில்லையே, செய்யவில்லை என்றால் என்ன என்பது போன்ற சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
வாட்ஸ் அப் தனது புதிய கொள்கை விதிகளை பயனாளர்களுக்கு டிசம்பர் 2020 தெரிவிக்க திட்டமிட்ட நிலையில், ஆகஸ்ட் 2020 அன்று தனது மினிமம் ஆன்ட்ராய்டு API சப்போர்ட் வெர்சனை 15-ல் இருந்து 16-க்கு உயர்த்தி பயனாளர்கள் அனைவரையும் கட்டாயம் அப்டேட் செய்ய வைத்தது.
மேலும், இந்த வாட்சப் குரூப் கால் icon 2018 ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டில் அனைத்து இந்திய பயனாளர்களுக்கும் வந்துவிட்டது. ஆனால், வைரலாகும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் குரூப் கால் icon இல்லை.
மேலும், செல்போனில் 12 மணி நேர முறையும், வாட்ஸ் அப் சாட்டில் 24 மணி நேர முறையும் என வித்தியாசம் இருப்பதை காணலாம். 24 மணி நேர முறை அமைப்பதாக இருந்தாலும், செல்போனில் அமைக்கப்பட்டு இருக்கும் நேரமே வாட்ஸ் அப் சாட்டின் போது காண்பிக்கும். செல்போன் நேரத்தில் குளறுபடிகள் இருந்தால் அது வாட்ஸ் அப்பிலும் காண்பிக்கும் என்பதற்கு மேற்காணும் புகைப்படத்தை பார்க்கலாம்.
முடிவு :
நம் தேடலில், Fotoforensics தளத்தின் முடிவு மட்டுமின்றி வைரல் செய்யப்படும் வாட்ஸ்அப் சாட் ஸ்க்ரீன்ஷார்டில் நேர முறையில் இருக்கும் குளறுபடிகள், புதிய தலைமுறை செய்தியில் நியூஸ் கார்டு வெளியான நேரத்திற்கு முன்பே வாட்ஸ் அப் சாட்டில் நியூஸ் கார்டு பகிரப்பட்டது, வாட்ஸ் அப் குரூப் கால் icon இடம்பெறாதது உள்ளிட்ட தவறுகளை சுட்டிக் காட்டி இருக்கிறோம்.
இதன் மூலம் PSBB பள்ளி ஆசிரியர்கள் நடத்திய வாட்ஸ் அப் சாட் என வைரல் செய்யப்படும் ஸ்க்ரீன்ஷார்ட் உண்மையானது அல்ல, பொய்யாக உருவாக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷார்ட் என அறிய முடிகிறது.