பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை..!

பரவிய செய்தி
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இருந்தால் அரசு உதவி ரூ.75,000 வழங்கப்படுகிறது. ஏழைகளும் தெரிந்து கொள்ள பகிருங்கள். இதற்கான அரசாணை எண் 39.
மதிப்பீடு
சுருக்கம்
அரசாணை எண் 39-ன் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் வருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால், பாதிக்கப்படும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 வழங்க அரசு ஆணை 2005-ல் பிறப்பிக்கப்பட்டது.
விளக்கம்
கல்வி கற்க ஆசை இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வி பயில முடியாத குழந்தைகள் இன்றும் நம் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதிலும், தன்னை படிக்க வைக்கும் தாய், தந்தையர் இறந்து விட்டால் பொருளாதாரரீதியில் பாதிக்கப்படுவதால் அக்குழந்தைகள் படிப்பை இடையிலேயே விடும் சூழல் உருவாகிறது.
அத்தகைய சூழலில் சிக்கும் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடர தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம் மாணவ, மாணவியர்களின் கல்வி தடைப்படாமல் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது மீள முடியாத வகையில் நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படும் அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 நிதி வழங்க அரசு ஆணை 39 பிறப்பிக்கப்பட்டது “
இந்த அரசு ஆணை 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி தமிழக சட்டமன்ற பேரவையில் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அரசு வழங்கும் ரூ.50,000 தொகையானது அரசு நிதி நிறுவனங்களில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் முதிர்வு தொகையை அந்த குழந்தைகளின் கல்விச் செலவிற்காகவும், அவர்களின் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படும் என ஆணையில் இடம்பெற்றுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் இவ்வுதவி சிறிதளவிலாவது பயன்படும் வகையில் உள்ளது.
எனினும், வருமானம் ஈட்டும் பெற்றோர் இறந்தால் மட்டுமே அரசு ஆணையில் 50,000 உதவித்தொகை அளிக்கும் என்று இருக்கிறது. அந்த தொகையும் குழந்தைகள் பெயரில் டெபொசிட் செய்யப்படும், நேரடியாக வழங்கப்படாது. முடிந்தவரை இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்.