This article is from Jan 21, 2019

சுத்தம் செய்யலாம், சாமியை தொடாதே !

பரவிய செய்தி

148 ஆண்டுகளுக்கு பிறகு புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே குகை கோவிலில் சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பிறகு கருவறைக்குள் யாரும் செல்லக் கூடாது என அர்ச்சகர்கள் தடுத்துள்ளனர்..

மதிப்பீடு

சுருக்கம்

மலைக்கு கீழே இருந்த இரு அர்ச்சகர்கள் லிங்கத்தின் அருகே யாரும் செல்லக் கூடாது, தொடக் கூடாது என கூறியதற்கும், யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என எழுதிய வாசகத்திற்கும் எழுந்த கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு அங்கிருந்த வாசகங்கள் அழிக்கப்பட்டன.

விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடைவரைக்கோவில்கள், பழமையான கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள், கிராம மக்கள் மூலம் மீட்டெடுக்கப்பட்ட பழமையான கோவில்கள் பற்றிய செய்திகளை அறிந்து இருப்போம். அவ்வாறான பழமையான குடைவரைக்கோயில் தற்போது மீட்டெடுக்கப்பட்ட சம்பவமும், அதில் உண்டான சர்ச்சைப் பற்றி நாம் திரட்டிய வெளி வராத தகவலை காண்போம்.

புதுக்கோட்டையின் நார்த்தாமலை கிராமத்தின் மேலமலைப் பகுதியில் விஜயாலீசுவரர் கோவில் மற்றும் குடைவரைக்கோயில்கள் உள்ளன. அக்கோவிலுக்கு செல்லும் பாதையில் இருந்த சுனை நீரில் மூழ்கிய சிவ லிங்கம் அமைந்து உள்ளதாக அதனருகே இருந்த கல்வெட்டில் இருந்த குறிப்புகளின் வாயிலாக அறிந்துள்ளனர்.

1872-ல் புதுக்கோட்டை தொண்டைமான் ராணி சுனையில் இருந்த நீரினை வெளியேற்றி மலையின் குடைக்குள் அமைந்து இருந்த சிவ லிங்கத்தை வழிப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது

சுனை நீரில் மூழ்கி இருக்கும் சிவ லிங்கத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கிய “ யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் தொல்லியல் துறையின் அனுமதியுடன் 148 ஆண்டுகள் நீரில் மூழ்கி இருந்த சிவ லிங்கத்தை மீட்டனர். இதற்கு கிராம மக்களும், நூறு நாள் பணியில் ஈடுபட்டவர்கள் என பலரும் உதவிகரம் அளித்தனர்.

டிசம்பர் 31, 2018-ல் தொடங்கிய பணியில் நீரை வெளியேற்றிய பிறகும் 7 அடிக்கு நிறைந்து இருந்த சேற்றை வாளியில் அள்ளி அகற்றியுள்ளனர். இதன் பிறகு லிங்கத்திற்கு பூமாலைகள் அணிவித்து பூஜைகள் செய்துள்ளனர் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை அனைத்தும் செய்திகளில் வெளியானவை. அதன் பிறகு நடந்த கண்டனத்துக்குரிய செயல்கள் பற்றி யாரும் அறியவில்லை. சிவ லிங்கத்தை மீட்கும் பணியில் “ யாதும் ஊரே யாவரும் கேளீர் “ அமைப்பில் இருந்தவர் அளித்த தகவலை விரிவாக காண்போம்.

முதலில் புதுக்கோட்டை சித்தன்னவாசல் பகுதியில் இருந்த சுனையை சுத்தப்படுத்தி லிங்கத்தை மீட்டெடுக்கும் பணிக்கு பிறகு அங்கிருந்த பூசாரி இதேபோன்று நார்த்தாமலையிலும் சுனை நீரில் லிங்கம் மூழ்கி இருப்பதாக தகவல் அளித்துள்ளார். அதன் பின் ஊர் மக்களின் தகவல்கள், கல்வெட்டுகள் உதவியுடன், தொல்லியல் அதிகாரிகளின்  அனுமதியுடன் மீட்கும் பணிகள் நடைபெற்றன. சுனை நீரை வீணடிக்கக் கூடாது என அதிகாரிகள் கூறியதால் அங்கிருந்த நீரை மோட்டர்கள் கொண்டு மலைக்கு பின் இருந்த ஊரணியில் கலந்து விட்டனர்.

நீரை வெளியேற்றிய பிறகு அதிகம் சேறு நிறைந்து இருந்ததால் உதவிக்கு ஊர் மக்களையும் அழைத்துக் கொண்டுள்ளனர் அமைப்பினர். சில நாட்களுக்கு பிறகு ஜனவரி 4-ம் தேதி வேலைகள் முடிந்த பிறகு ஒருவர் வந்து ஐயர் வைத்து பூஜை செய்யலாம் எனக் கூறியதற்கு அமைப்பை சேர்ந்தவர்கள், “ நாங்கள் முதலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி வணங்கி விட்டு செல்கிறோம். கோவில் உங்களுடையது பிறகு உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்கள் “ எனக் கூறியுள்ளனர்.

பூமாலை அணிவித்து பூஜை செய்யும் பொழுது யாரு என்று தெரியாத ஐயர் ஒருவர் வந்து என்ன செய்கிறார்கள் என கேட்டுக் கொண்டு மற்றொரு ஐயருக்கு தகவல் அளித்து வரவழைத்து உள்ளார். ஐயர்கள் சேர்ந்துக் கொண்டு யாரை கேட்டு இதை எல்லாம் செய்கிறீர்கள் எனக் கத்தியுள்ளனர். எங்கள் பூஜையை முடித்துக் கொண்டு சென்று விடுகிறோம் என அமைப்பை சேர்ந்தவர்கள் கூறிய பிறகு லிங்கத்தை சுற்றி வரும் போதே மாலையை எடுத்து தூக்கி எரித்துள்ளார் அர்ச்சகர். லிங்கத்திற்கு செய்த அலங்காரத்தையும் நீக்கியுள்ளனர்.

அங்கு இருந்த அதிகாரிகளுக்கும் கூட மரியாதை இல்லை என வருத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். “ சுத்தம் செய்ய வந்தால் சுத்தம் செய்து விட்டு போக வேண்டும், உள்ளே வரக் கூடாது. இதேபோன்று தஞ்சாவூர் கோவிலில் உங்களால் பண்ண முடியமா ? “என்றெல்லாம் பேசியுள்ளனர்.

முதலில் யாரும் உள்ளே வரக் கூடாது என எழுதவில்லை. லிங்கத்தை தொட்டு வணங்க கூடாது என கூறியதாக அங்கு சென்ற சிவா என்பவர் கூறியுள்ளார். பின்னர் யாரும் உள்ளே வரக் கூடாது என எழுதி விட்டனர்.

சிவ லிங்கம் அமைந்து இருந்த குகைக்குள் தயவு செய்து யாரும் செல்ல வேண்டாம் என எழுதிய வாசகம் மிகப் பெரிய அளவில் சமூக வலைதளத்தில் சர்ச்சையாகிய பிறகு, “ தற்போது பெயின்ட் கொண்டு அந்த வாசகம் நீக்கப்பட்டுள்ளது “.

சுனையை சுத்தம் செய்ய தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து, ஊர் மக்களின் உதவியால் மீட்டெடுக்கப்பட்ட சிவ லிங்கத்திற்கு தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி வணங்க உரிமையில்லையா என்பது உழைத்தவர்களின் வேதனை. எந்த உழைப்பையும் அளிக்காதவர்கள் இறுதியில் வந்து உரிமைக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்.

சேற்றில் இறங்கி உழைத்தவன் இறை பக்தியோடு கடவுள் சிலையை தொடக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை, ஏன் அந்த இறைவனும் கூறவில்லை. எக்குலத்தில் பிறந்தால் என்ன இறைவன் அனைவருக்கும் சமம் தானே “.

Please complete the required fields.




Back to top button
loader