காரில் மாட்டை கட்டி இழுத்து செல்லும் புகைப்படம்.. எதனால் ?

பரவிய செய்தி
சாலையில் சென்ற போது குறுக்கே வந்து விழுந்து தன் காரின் ஹெட்லைட் உடைந்து விட்டது என்ற கோபத்தில் இளம் பசுங்கன்றை கயிறு கட்டி 10 கிலோ மீட்டர் இழுத்து சென்று தன் கோபத்தை தனித்துக் கொண்டது ராஜஸ்தான் காவிக் கும்பல்.
மதிப்பீடு
சுருக்கம்
சாலையில் இறந்து கிடந்த மாட்டை புதைக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல காரில் கயிற்றை கட்டி இழுத்து சென்றுள்ளனர். அந்த மாட்டை புதைக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவும் செய்தி வதந்தி என நிரூபிக்கும்.
விளக்கம்
பிஜேபி கட்சியின் போஸ்டர் ஒட்டப்பட்ட கார் ஒன்றில் இளங்கன்றை கட்டி இழுத்துச் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளங்கன்றை இரக்கமின்றி கொடுமை செய்வதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை பகிரவும் என்றும் இந்த பதிவு பரவி வருகிறது. இந்த சம்பவம் எங்கே, எதனால் நடந்தது என்பதை காண்போம்.
ராஜஸ்தானின் ஜெய்பூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தொகுதியின் பிஜேபி எம்.எல்.ஏ பெயர்கைலேஷ் வர்மா. இளங்கன்றை இழுத்து செல்லும் ஸ்கார்பியோ காரின் பின்புறத்தில் கைலேஷ் வர்மாவின் பிறந்தநாளில் நடத்தப்பட்ட இரத்த தானம் முகாம் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
பசுவை தெய்வமாக வணங்குவதாகக் கூறிவிட்டு மாட்டைச் சித்தரவதை செய்கிறார்கள் என கைலேஷ் வர்மாவைக் குறிப்பிட்டு கண்டங்கள் எழுந்தன. இதையடுத்து இதற்கான விளக்கத்தை எம்.எல்.ஏ கைலேஷ் வர்மா அளித்துள்ளார்.
“ புகைப்படத்தில் போஸ்டர் ஒட்டப்பட்ட ஸ்கார்பியோ காரில் எம்.எல்.ஏ கைலேஷ் வர்மாவின் ஊழியர் ஒருவர் ஜெய்ப்பூரில் இருந்து கிராமத்திற்கு சென்று கொண்டு இருக்கும் பொழுது கால்ப் சாலையில் இளங்கன்று ஒன்று இறந்து கிடந்துள்ளது. இறந்த மாட்டை அப்புறப்படுத்தி புதைப்பதற்கு மாட்டை காரில் கயிற்றால் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
கால்ப் சாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மாட்டின் உடல் சீக்கிரம் சிதைவடையும் என்பதால் மாட்டின் உடல் மீது அதிகளவில் உப்பைக் கொட்டி புதைத்து உள்ளனர் “
எம்.எல்.ஏ கைலேஷ் வர்மா இவ்விவகாரத்தில் விளக்கம் அளித்ததோடு அதற்கு ஆதாரமாக மாட்டை புதைக்கும் புகைப்படங்களையும் அளித்து உள்ளார். நடந்த சம்பவம் என்னவென்று அறியாமல் சோசியல் மீடியாவில் வதந்திகளை பரப்புகின்றனர் என எம்.எல்.ஏ கைலேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.
ரோட்டில் இறந்ததால் புதைப்பதற்கு எடுத்துச் சென்ற மாட்டை காரின் ஹெட்லைட் உடைந்து விட்டது என்ற கோபத்தில் காரில் கட்டி 10 கிலோ மீட்டருக்கு இழுத்துச் சென்றாக தவறான செய்திகள் பரவுகின்றன.