12 கோடி மதிப்புடைய புங்கனூர் பசுவின் புகைப்படங்கள்| உண்மை என்ன ?

பரவிய செய்தி

இந்த பசுவின் விலை ரூ.12 கோடி. ஆமாம், நீங்கள் படித்தது உண்மைத்தான். இது புங்கநூரு ஜாதி பசு. ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் தருகிறது. இந்த ஜாதி பசுவின் பால்தான் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பசுவின் தரிசனம் கை நிறைய சுப பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. நிறையபேருக்கு தரிசன அருள் கிடைக்க பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

ஆந்திராவில் மிகக்குறைவாகவே இருக்கும் புங்கனூர் இன மாடுகள் குறித்தும், வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் மாட்டினைக் குறித்தும் விரிவாக படியுங்கள்.

விளக்கம்

ஆந்திராவில் இருக்கும் புங்கனூர் இன மாடுகளின் விலை, பால் அளவு, அவற்றின் பயன்பாடு குறித்த தகவலானது புகைப்படம் ஒன்றுடன் தமிழக சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வருகிறது. 12 கோடி மதிப்புடைய பசு தரும் 100 லிட்டர் பாலினைக் கொண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்யப்படுவதாக இப்பதிவுகள் கூறுகின்றன.

Advertisement

உண்மை என்ன ?

இவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தேடிய பொழுது பல உண்மைகள் நமக்கு கிடைத்தது. முதலில் புங்கனுர் இன மாடு என வைரலாகும் பதிவுகளில் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கும் பொழுது தமிழில் முகநூல் பதிவுகள் மட்டுமின்றி ஆங்கில மொழியில் புகைப்படங்கள் உடன் வெளியான ட்விட்டர் பதிவுகளும் நமக்கு கிடைத்தன.

Advertisement

அதில், 2017 ஏப்ரல் 25-ம் தேதி ஜேஷ் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மேற்க்கூறிய புகைப்படத்தை புங்கனூர் மாடு என்றே பகிர்ந்து இருந்தார். இதற்கு முன்பாக, Indian Culture and Tradition என்ற முகநூல் பக்கத்தில் ஜூன் 29-ம் தேதி இதே புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் புங்கனூர் மாட்டின் பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் மூலம் லட்டு தயாரிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

Twitter Link | Archived Link

மேலும், தொடர்ச்சியான தேடலில், ட்விட்டரில் புங்கனூர் மாடு என கூறும் பதிவு ஒன்றில் sujith என்பவர் வேறு விதமான தகவலை அளித்து இருந்தார். அதில், இந்த மாடு பாகிஸ்தானில் இருக்கும் குர்பானி மாட்டினை போன்று அலங்கரிக்கப்பட்டு இருக்கும் மற்றொரு பக்கத்தின் புகைப்படம். இது புங்கனூர் இன மாடுகள் இல்லை எனக் குறிப்பிட்டு இருந்தார்.

சுஜித் வெளியிட்ட புகைப்படத்திற்கு, வைரலாகும் புகைப்படத்திற்கு இடையே இருக்கும் ஒன்றுமையை படத்தில் காணலாம். மேலும், சுஜித் வெளியிட்ட புகைப்படத்தில் ” Pakisthan Cattle Expo ” என்ற லோகோ இருக்கிறது.அதுமட்டுமல்லாமல், அந்த மாட்டிற்கு பால் மடியே இல்லை என்பதை புகைப்படத்தில் காண முடிகிறது.

புங்கனூர் இன மாடுகள் : 

உண்மையில் ஆந்திராவில் புங்கனூர் நாட்டு இன மாடுகள் குறைந்த அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூன்று முதல் நான்குஅடி உயரம் மட்டுமே கொண்ட இந்த வகை மாடுகள் ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. புங்கனூர் என்ற கிராமத்தில் இருந்தே இவ்வகை இன மாடுகள் தோன்றியதால் அப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹிந்து ஆங்கில இணைய செய்தியில் ” Punganur cow a craze among the rich ” என்ற தலைப்பில் புங்கனூர் இன மாடுகள் குறித்து கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.

Youtube Link | Archived link 

புங்கனூர் இன மாடுகள் உலகிலேயே மிகக் குறைந்த உயரம் கொண்ட மாடுகள். எனினும், இவ்வகை பசு மாடுகள் அளிக்கும் பாலின் அடர்த்தி அதிகம். சாதாரணமாக, ஒரு பசு மாட்டின் பாலானது 3 முதல் 3.5 சதவீதம் கொழுப்பு கொண்டது. ஆனால், புங்கனூர் மாட்டின் பாலானது எருமை மாட்டின் பாலில் உள்ள 8 சதவீத கொழுப்பிற்கு நிகரானது எனது கால்நடை நலத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

” திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கால்நடை கூடத்தில் 200 புங்கனூர் இன மாடுகள் இருப்பதாகவும், அவற்றின் பால் கொண்டு தயாரிக்கப்படும் நெய்யை ஸ்ரீ வெங்கடேஷ்வரருக்கு அர்ச்சனை செய்யப் பயன்படுத்துவதாக ” ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் குறைந்த அளவிலேயே புங்கனூர் இன மாடுகள் உள்ளன. அத்தகைய மாடுகள் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியவை என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. இந்த வகை மாடுகள் 1 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. 12 கோடி அல்ல. அதேபோன்று, 100 லிட்டர் பால் தருவதாக கூறுவதும் தவறான தகவல்.

முடிவு : 

நம்முடைய ஆய்வில், புங்கனூர் இன மாடுகள் என வைரலாகும் மாடானது புங்கனூர் இன மாடே அல்ல. அந்த மாட்டிற்கு பால் மடி இல்லை. மேலும், அந்த மாட்டின் புகைப்படங்களில் பாகிஸ்தான் நாட்டின் கால்நடை கண்காட்சியின் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

ஆந்திராவில் உள்ள புங்கனூர் இன மாடுகள் திருப்பதி கோவிலில் வளர்க்கப்படுவதாக ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது. அந்த மாட்டின் பாலில் இருந்து நெய் தயாரிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

புங்கனூர் இன மாடுகள் 12 கோடி விலை மதிப்புடையது, 100 லிட்டர் பால் தரும் எனக் கூறுவதும் தவறான தகவலே. அந்த மாட்டின் விலை 1 லட்சம் மட்டுமே. இப்படி பல தவறான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button