நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட சிசிடிவி எனப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கன்னட திரைப்பட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29-ம் தேதி காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பிறகு நெஞ்சுவலியில் மயங்கி விழும் இறுதி நிமிட சிசிடிவி காட்சி என படிக்கட்டில் ஒருவர் மயங்கி விழும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இதற்கு முன்பாகவே இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோவாகும். 2021 செப்டம்பர் 1-ம் தேதி ட்விட்டர்வாசி ஒருவர், ” பெங்களூரில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பிறகு நெஞ்சுவலி காரணமாக 33 வயது இளைஞர் உயிரிழந்தார் ” என அதே வீடியோவை பகிரந்து இருக்கிறார்.
33 years young man died due to #HeartAttack, after workout in #gym in Bangalore. His final moments captured on CCTV. Youngsters should be careful about excessive workout. They should do gyming only after a thorough #Heart checkup and advice from doctor👇 pic.twitter.com/iFOKBf5WVq
— Arun Deshpande 🇮🇳 75🇮🇳 (@ArunDeshpande20) September 1, 2021
ஆகஸ்ட் 31-ம் தேதி கர்நாடகா செய்தி பக்கம் ஒன்றிலும் அதே வீடியோ வெளியாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்த பிறகு நெஞ்சுவலியில் மயங்கி விழுந்த இளைஞரின் வீடியோவை வைத்து புனித் ராஜ் குமாரின் இறுதி நிமிட வீடியோ என தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இறுதி நிமிட சிசிடிவி என பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்த பிறகு நெஞ்சுவலியில் மயங்கி விழுந்த இளைஞரின் வீடியோ என அறிய முடிகிறது.