This article is from Jun 14, 2019

பஞ்சாப்பில் ஏலியன் என வைரலாகும் வீடியோ | உண்மையில் ஏலியனா ?

பரவிய செய்தி

பஞ்சாப் மாநிலத்தில் சாலையில் ஏலியனைப் போல ஒரு உருவம் செல்லும் சிசிடிவி காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ஒரு பெண்.

மதிப்பீடு

விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவில் சாலையில் ஏலியன் போன்ற ஒரு உருவம் சென்றதாக கூறி சிசிடிவி கேமராவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களின் எதிரொலியால் முக்கிய செய்தி நிறுவனங்களின் தளங்களிலும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.

ஜூன் 13-ம் தேதி நக்கீரன் பத்திரிகையில் ” பஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவில் சாலையில் ஏலியனைப்போல ஒரு உருவம் செல்லும் சிசிடிவி காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஒரு பெண். எதிர்பாராத விதமாக தன் வீட்டின் முகப்பில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சியை பார்க்கும்போது ஏலியனை போன்று ஒரு உருவம் உலா வருவதைப் பார்த்து அதிர்சியடைந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார் ” என வீடியோ காட்சியுடன் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

இதே போன்று, நியூஸ் 18 இணையதள செய்தியிலும் வைரலாகும் வீடியோவை பதிவிட்டு பஞ்சாபில் ஏலியன் என செய்தி வெளியிட்டு உள்ளனர். ஏலியன் குறித்த செய்திகள் என்பதால் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி செய்தி தளங்களிலும் வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

எங்கிருந்து ஆரம்பித்தது ?

முதன் முதலில் ஏலியன் குறித்த வீடியோ காட்சியை பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பெண் பதிவிட்டு இருந்தார் என செய்திகளில் கூறுகின்றனர். ஆனால், அதற்கு முன்பாவே vivian Gomaz என்ற முகநூல் பக்கத்தில் ஜூன் 6-ம் தேதி பதிவிடப்பட்டு உள்ளது. இந்த பதிவு 53 ஆயிரம் லைக்குகள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஷேர்களை பெற்றது.


ஜூன் 7-ம் தேதி jey bee என்ற ட்விட்டர் கணக்கில், இந்த வீடியோவை ஒரு பெண் பதிவிட்டு இருந்தார். காலையில் கேமராவில் இதை கண்டதாக பதிவிட்டு இருந்தார் எனக் கூறி ஏலியன் என பரவி சிசிடிவி காட்சியை பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட் லட்சக்கணக்கான லைக்குகள், ரீட்வீட்களை பெற்றது.

இதில் இருந்து தற்போது இந்தியாவில் வைரலாகும் வீடியோ பஞ்சாப்பை சேர்ந்தது இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஏலியனா ?

Dobby எனும் கதாப்பாத்திரம் ” ஹரிபார்ட்டர் ” திரைப்படத்தில் வரும் கற்பனையாக உருவாக்கப்பட்ட உருவம். காதுகள் நீண்டு, உயரம் குறைவாக, மெலிந்த தேகத்துடன் இருக்கும். இந்த கதாப்பாத்திரம் உண்மையில் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது என்றே முதலில் பரவியுள்ளது.

வைரலாகிய வீடியோவை முதன் முதலில் ஜூன் 6-ம் தேதி பதிவிட்டு உள்ளனர். இதற்கு முன்பாக Niantic, Inc. and WB Games San Francisco ஆனது ” Harry Potter: Wizards Unite ” என்ற ட்ரெய்லரை வெளியிட்டனர். ஹரிபார்ட்டர் படத்தினைப் போன்று கேம் ஒன்று வெளியாக உள்ளது.

எனினும், ஹரிபார்ட்டர் கேம்-க்கும், வைரலாகிய வீடியோக்கும் சம்பந்தமில்லை தோன்றுகிறது என தோன்றுகிறது. இந்தியாவில் வைரலாகும் வீடியோவில் காட்சியில் தெளிவு இல்லை.

Vivian Gomez வெளியிட்ட வீடியோவில், முதலில் அந்த உருவம் வருவதற்கு முன்பாக நிழல் தோன்றும். அதில், தலையில் துணி ஒன்றினை மாட்டிக் கொண்டு இருப்பது தெரிகிறது. இரண்டாவது , ஏலியன் எனக் கூறும் உருவம் குறும்புடன் நடனமாடி உள்ளது. மூன்றாவது 30 நொடிகளுக்கு மேல் அந்த வீடியோப் பதிவு இல்லை.

முடிவு :

Vivian Gomez என்பவரது முகநூல் பக்கத்தில் 8 வயது மதிப்புத்தக்க சிறுவனின் புகைப்படங்கள் அதிகம் இருப்பதை காண முடிந்தது. ஒரு குறும்புக்கார குழந்தை தலையில் துணியினை மாட்டிக் கொண்டு நடனமாடிய சிசிடிவி வீடியோ காட்சிகளை ஏலியன் என நினைத்து உள்ளனர்.

விளையாட்டிற்காக செய்த செயல் வைரலாகி உள்ளது. இதை ஒரு நல்ல மார்க்கெட்டிங் செயலும் கூட எனலாம். வீடியோவில் இருக்கும் அறிகுறிகளை உன்னிப்பாக கவனித்து அதில் இருப்பது ஏலியன் இல்லை என்பதை நிரூபிக்க முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader