பாகிஸ்தானில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை இந்தியாவில் நிகழ்ந்ததாக வதந்தி !

பரவிய செய்தி
காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி கற்பழித்த பின்பு வயலில் தூக்கி போட்டு சென்றுள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தவறு நடந்தால் அதை மறைப்போம் என்றால் தமிழக மக்கள் என்ன அடி முட்டாள்களா ?
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக கூறப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வதாக வெளியான செய்தியால் அரசியல்ரீதியான மோதல்கள் உருவாவதை நம் கண்முன்னே பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், பிஜேபி ஆளும் மாநிலத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமை பற்றி பேசும் தமிழக ஊடகங்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு மதுவை ஊற்றி பாலியல் வன்புணர்வு செய்து வயலில் தூக்கி வீசி சென்றதை பேசவில்லை எனக் கூறி செய்தி லிங்க் ஒன்றை இணைத்து மீம் ஆகப் பதிவிட்டு இருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கொடுக்கப்பட்ட செய்தியில் பாகிஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ள ஜரன்வாலா நகரம் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது.
” பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜரன்வாலா நகரத்தில் பேருந்திற்காக நின்றுக் கொண்டிருந்த பெண்ணிற்கு லிப்ட் கொடுப்பதாக கூறி காரில் ஏற்றியவர்கள் அப்பெண்ணிற்கு மதுவை ஊற்றி 6 பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் ” என தி நியூஸ் இன்டர்நேஷனல் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதேபோல், பாகிஸ்தானின் பல செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் பிஜேபி ஆளும் மாநிலத்தில் மட்டுமே நிகழ்கிறதா, காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது. இந்தியா முழுவதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால், ஆட்சியில் இருப்பவர்களும், எதிர் கட்சியில் இருப்பவர்களும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை அரசியல் மோதலாக மாற்றுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணப்படுவதற்கு பதிலாக சமூக வலைதளங்களில் மோதல்களும், புரளிகளுமே உருவாக்கப்படுகின்றன.