குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மதிக்கவில்லையா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் 2022 உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டோக்கியோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி படிக்கட்டுகளில் முன்னே நடந்து செல்ல மற்ற நாட்டுத் தலைவர்கள் பின்னே வருவது போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாஜகவினர் வைரல் செய்தனர். இதையடுத்து, குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை ஜோ பைடன் திரும்பி கூட பார்க்கவில்லை, மதிக்கவில்லை என இரு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோடி உரக்க சொன்னால் அமெரிக்கா கேட்கும் – அண்ணாமலை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மோடியை திரும்பி கூட பார்க்கவில்லை என்பது தான் உண்மை!!!pic.twitter.com/5b3ihRjUxP
— TN Congress IT & Social Media Department (@TNCCITSMDept) May 24, 2022
உண்மை என்ன ?
குவாட் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் சந்தித்து ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது பதிவான வீடியோவில் இருந்தே இக்காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வின் முழுமையான வீடியோ பதிவு மே 24-ம் தேதி Aaj Tak சேனலின் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
இந்தியப் பிரதமரும், ஆஸ்திரேலிய பிரதமரும் ஒன்றாக நடந்து வருகையில் ஜோ பைடன் பிரதமர் மோடியை பார்த்து ஆஸ்திரேலிய பிரதமரை கை காண்பித்து பேசுவதும், ஜோ பைடன் ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் பேசிய பிறகு பிரதமர் மோடியுடன் பேசுவதும், சிரிப்பதும், கைக் கொடுக்கும் காட்சிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
டோக்கியோவில் நான்கு நாடுகளின் தலைவர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆஸ்திரேலியாவின் எஸ்பிஎஸ் செய்தியின் பத்திரிக்கையாளர் நவீன் ராசிக் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவின் முதல் 14 நொடிகள் மட்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Prime Minister Anthony Albanese shakes hands with US President Joe Biden and appears to crack a few jokes as the leaders of the Quad pose for the ‘family photo’ in Tokyo #auspol @SBSNews pic.twitter.com/jS326e746S
— Naveen Razik (@naveenjrazik) May 24, 2022
முடிவு :
நம் தேடலில், குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மதிக்கவில்லை எனக் கூறுவது தவறானது. அந்நிகழ்வின் முழுமையான வீடியோவில் ஜோ பைடன் பிரதமர் மோடியுடன் பேசுவதையும், சிரிப்பதையும், கைக் கொடுப்பதையும் பார்க்க முடிந்தது என அறிய முடிகிறது.