இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு உணவை தூக்கி வீசியதாகப் பரவும் தவறான வீடியோ

பரவிய செய்தி

ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கு கோழிகளுக்கு வீசுவது போன்று உணவை தன் கையால் ராணி வீசுகிறார். #குயின்எலிசபெத்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் செப்டம்பர் 8-ம் தேதியன்று ஸ்காட்லாந்தில் உள்ள அவரது பால்மோரல் கோட்டையில் இயற்கை எய்தினார். அவரது மரணத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டன.

Advertisement

இதற்கிடையில், இதே ராணி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஆப்பிரிக்காவிற்கு சென்ற போது கோழிகளை போன்று குழந்தைகளுக்கு உணவை தூக்கி வீசியதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் ” Lumière Brothers – Indochina: Children Gathering Coins ” எனும் தலைப்பில் இதே வீடியோ கருப்பு வெள்ளையில் வெளியாகி இருந்ததை  கண்டறிந்தோம்.

மேற்கொண்டு தேடிய போது, ” உலகெங்கிலும் உள்ள திரைப்படங்களின் தரவுத்தளத்தை வைத்திருக்கும் IMDb இணையதளத்திலும் இந்த வீடியோ இடம்பெற்று இருந்தது. இதை 1901ம் ஆண்டு பிரெஞ்சு இந்தோசீனாவில்(வியட்நாம்) கேப்ரியல் வேயரால் எடுக்கப்பட்ட கிளிப் என IMDb தளம் குறிப்பிடுகிறது.

கேப்ரியல் வேயர் ஒரு பிரெஞ்சு இயக்குனர் மற்றும் புகைப்படக்கலைஞர். வீடியோவில் விக்டோரியன் காலத்து ஆடைகளுடன் ஐரோப்பிய பெண்கள் குழந்தைகளின் மீது நாணயங்களை வீசுவதை காணலாம்.

மேலும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட போது ராணி இரண்டாம் எலிசபெத் பிறக்கக்கூட இல்லை. இரண்டாம் எலிசபெத் 1926ல் பிறந்தார் மற்றும் 1952ல் ராணியானார். அதேபோல், இரண்டாம் எலிசபெத் ராணி ஆவதற்கு முன்பே 1936ல் கேப்ரியல் வேயர் இறந்து விட்டார். எனவே, இந்த வீடியோவில் உள்ள பெண் ராணி இரண்டாம் எலிசபெத் அல்ல.

முடிவு : 

நம் தேடலில், ராணி இரண்டாம் எலிசபெத் ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கு உணவை கோழிகளுக்கு வீசுவது போன்று தூக்கி வீசுவதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ ராணி இரண்டாம் எலிசபெத் பிறப்பதற்கு முன்பே 1901ல் பிரெஞ்சு இயக்குநர் கேப்ரியல் வேயர் என்பவரால் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button