ரஃபேல் விமானத்தை இந்தியா டெஸ்ட் டிரைவ் செய்த வீடியோவா ?

பரவிய செய்தி
ரஃபேல் போர் விமானத்தை நம்ம ராணுவ வீரர்கள் லைட்டா டெஸ்ட் டிரைவ் விளையாட்டு காட்டிய போது..
மதிப்பீடு
விளக்கம்
ஜூலை 29-ம் தேதி ரஃபேல் விமானங்களின் முதல் பகுதியாக 5 விமானங்கள் அம்பாலா ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனுக்கு வந்தடைந்தன. இந்தியா வந்திறங்கிய ரஃபேல் விமானத்தை இந்திய ராணுவ வீரர்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதாக கீழ்காணும் வீடியோ இந்திய அளவில் பல மொழிகளில் வைரலாகி வருகிறது. தமிழில் 3 நிமிட வீடியோவில் பாகுபலி பாடலையும், 9 நிமிடம் கொண்ட வீடியோவில் பிற மொழி பாடலும் இணைக்கப்பட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
இந்திய அளவில் வைரல் செய்யப்படும் வீடியோவின் தொடக்கத்திலேயே இடம்பெற்று இருக்கும் நபர்கள் இந்தியர்கள் போன்று இல்லை என்பதை பார்க்க முடிந்தது. மேலும், இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ தளத்திலோ அல்லது செய்தியிலோ கூட இப்படியொரு வீடியோ வெளியாகவில்லை. அதில் இருந்தே இவ்வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல, அயல்நாட்டில் எடுக்கப்பட்டது என தெளிவாய் தெரிந்தது.
இந்த வீடியோ குறித்து அறிந்து கொள்ள ” டசால்ட் ரஃபேல் ” எனும் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு வீடியோக்களில் தேடிய பொழுது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி PaddyPatrone எனும் யூடியூப் சேனலில் 9 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், 2016-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள செல்ட்வெக் பகுதியில் டசால்ட் ரஃபேல் விமானம் பறப்பதை படம் பிடித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
2016-ம் ஆண்டில் ஆஸ்திரியா நாட்டில் நிகழ்ந்த ” டசால்ட் ரஃபேல் ” விமானத்தின் ஏர்ஷோ நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியா பிரான்ஸ் நாட்டில் இருந்து புதிதாக வாங்கிய ரஃபேல் விமானத்தை இந்திய ராணுவ வீரர்கள் டெஸ்ட் டிரைவ் செய்ததாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், ரஃபேல் போர் விமானத்தை நம்ம ராணுவ வீரர்கள் லைட்டா டெஸ்ட் டிரைவ் விளையாட்டு காட்டிய போது என வைரல் செய்யப்படும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முந்தைய ஆஸ்திரியா நாட்டு வீடியோ என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.