பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் புதிய ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி
இந்திய ரிசெர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். இனி பேங்க் ஆஃப் இங்கிலாந்து இந்தியனின் தலைமையின் கீழ் இயங்க உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் புதிய ஆளுநராக ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்பட்டார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வதந்தியால் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
விளக்கம்
ரிசெர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் பொருளாதார வல்லுனரான திரு. ரகுராம் ராஜன் தன் ஆளுநர் பதவிக் காலம் முடிவடைந்த பின் சிகாகோ சென்றுள்ளார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜன் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார் என்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 28, 2018-ல் பேஸ்புக்கில் தனிப்பட்ட ஒருவரின் கணக்கில் வெளியான பதிவில், “ ரகுராம் ராஜன் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் புதிய ஆளுநராக தேர்வாகியுள்ளார். எப்போதும் போல் இந்தியர்களின் திறமையை அயல்நாட்டவர் கண்டுணர்ந்து, அவர்களை எடுத்துக் கொள்கின்றனர் ” என்று கூறியுள்ளனர். இந்த பதிவானது 7000-க்கும் அதிகமான ஷேர்களைப் பெற்றுள்ளது. இதனை உண்மை என நினைத்து பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ் அஃப் ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் , எம்.பி சசி தரூர் தனது ட்விட்டர் கணக்கில், ரகுராம் ராஜன் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் புதிய ஆளுநராக தேர்வாகியுள்ளார் என்று குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது உண்மை இல்லையென அறிந்த பிறகு தவறான செய்தியை பதிவிட்டதாக மற்றொரு பதிவின் மூலம் தெரிவித்தார்.
ரகுராம் ராஜன் பதில் :
வதந்தியில் கூறியது போன்று ரகுராம் ராஜன் அவர்கள் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவில்லை. இது குறித்து அவர் கூறிகையில், “ மன்னிக்கவும், இது முற்றிலும் வதந்தி. தற்போது உள்ள பணியில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். வேறு எங்கேயும் வேலை தேடவில்லை மற்றும் சேரவில்லை” என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட வதந்தியின் பரவலால் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் முதன்மைப் பதவிக்கான பட்டியலில் ரகுராம் ராஜன் இடம்பெற்றுள்ளார் என்று லண்டனின் தினப் பத்திரிகையான Financial Times-ல் வெளியாகியுள்ளது. அதில், “ யு.கே அதிபர் ஃபிலிப் ஹம்மொண்ட் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியில் மெக்சிகோவைச் சேர்ந்த மார்க் கார்னே வகித்து வந்த தலைமைப் பதவிக்கு ஏற்ற நபரை தேர்வு செய்யும் முதற்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த வருடம் நியமிக்கப்படும் ஆளுநர் பதவிக்கு பொருளாதார வல்லுநர் மற்றும் இந்திய ரிசெர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயரும் இடம்பிடித்துள்ளது என்று கார்ட்டூன் படத்துடன் ஏப்ரல் 29-ல் வெளியாகியது.
ரகுராம் ராஜன் பற்றி வதந்தி செய்திகள் வெளியாவது முதல் முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி நிகழ்த்திய முறைகேடு குறித்து காங்கிரஸ் ஆட்சியின் போது ப.சிதம்பரம் மற்றும் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை செய்ததாக கூறி வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மோடியின் முறைகேடு ரகுராம் ராஜன் காங்கிரசிற்கு எச்சரிக்கை விடுத்தாரா ?
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
ஆதாரம்
Taken in by fake news: shashi tharoor clarifies after tweeting about raghuram rajan’s