ராகுல் காந்தி வெள்ளத்தை பார்வையிடும் போது சமோசா சாப்பிடும் வீடியோ | உண்மை என்ன ?

பரவிய செய்தி
ராகுல் வெள்ளத்தை பார்வையிடும் போது சாஸ் மன்னிக்கவும் கண்ணீர் சிந்தும் காட்சி.
மதிப்பீடு
விளக்கம்
கேரள மாநிலம் கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்பை கண்டுள்ளது. வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்விட் செய்திருந்தார்.
இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிடுவதாக கூறி சமோசா சாப்பிட்டு கொண்டிருக்கிறார் என வீடியோ ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த பேராசிரியரான மது பூர்ணிமா கிஷ்வார் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ராகுலின் வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்திருந்தார். ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சமோசா சாப்பிடும் வீடியோ இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதனை காண்பவர்கள் அனைவரும் வீடியோவை அதிகம் பகிர்ந்தும் வருகின்றனர்.
ஆனால், கமெண்ட் பதிவுகளில் சிலர் தவறான பதிவுகள் என குறிப்பிட்டு வருகின்றனர். ஆகையால், வைரலாகும் ராகுல் காந்தி வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.
உண்மை என்ன ?
” Rahul Gandhi eating samosa ” என்ற வார்த்தையை பயன்படுத்தி தேடிய பொழுது, 2019 ஏப்ரல் 24-ம் தேதி abpnews என்ற இணையதளத்தில் தற்பொழுது வைரலாகும் வீடியோ பதிவாகி இருக்கிறது.
அதில், 2019 லோக்சபா தேர்தலுக்காக ராகுல் காந்தி மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஷக்டோல் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பொழுது ஹெலிகாப்டரில் ஷக்டோல் பகுதியின் பிரபலமான சமோசாவை சாப்பிட்டார் என ஹிந்தியில் வெளியாகி இருக்கிறது.
இதே போன்று, ஏப்ரல் 25-ம் தேதி TFPC என்ற யூட்யூப் சேனலில் ” Rahul Gandhi Eating Samosa ” என்ற தலைப்பில் தற்பொழுது வைரலாகும் வீடியோ பதிவாகி இருக்கிறது. இதில் இருந்து வைரலாகும் வீடியோ சமீபத்திய வீடியோ இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ராகுல் காந்தி வெற்றிபெற்ற வயநாடு தொகுதியை பார்வையிட இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு உள்ளார். ஆகஸ்ட் 12-ம் தேதி வயநாடு பகுதியில் தொகுதி மக்களை பார்வையிட்ட புகைப்படங்கள் ராகுல் காந்தியின் ட்விட்டரில் பக்கத்தில் பதிவாகி உள்ளது.
I left Wayanad with nothing but pride for the people I represent.
The display of bravery and dignity in the face of immense tragedy is truly humbling.
It is such an honour and pleasure to be your MP.
Thank you Kerala. pic.twitter.com/PVwmUAFboZ
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2019
முடிவு :
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியபிரதேசத்தில் ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி சென்ற பொழுது சமோசா சாப்பிட்ட நிகழ்வை கேரள வெள்ளத்துடன் தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.