ராகுல் காந்தியின் தாடி, தலைமுடியை மார்ஃபிங் செய்து பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி

பார்க்கப் பாவமாக இருக்கிறது. அனுதாப ஓட்டாவது கிடைக்காதா என்ற நப்பாசை

Archive twitter link 

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த நடைப் பயணத்தில் அவர் நடந்து நடந்து தாடிதான் வளருகிறது, கட்சியோ ஓட்டோ வளர போவதில்லை என்று ராகுல் காந்தியின் புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

Archive twitter link 

அப்புகைப்படத்தினை பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் சவுதா மணி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உண்மை என்ன ?

இந்திய ஒற்றுமை யாத்திரையினை ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3570 கிலோமீட்டர் தொலைவினை கடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை குறித்து பாஜக-வின் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் பல பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

தற்போது ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 

ராகுல் காந்தி நடக்க நடக்க தாடி மட்டுமே வளர்ந்துள்ளது என பாஜகவினர் பரப்பும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்தோம். அந்த புகைப்படம் 2022, அக்டோபர் 19ம் தேதி ஆந்திர பிரதேஷ் காங்கிரஸ் சேவாதல் (Andhra Pradesh Congress Sevadal) என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆந்திர காங்கிரசின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் உள்ள  புகைப்படத்திற்கும், பாஜகவினர் பரப்பும் புகைப்படத்திற்கும் வித்தியாசம் உள்ளது. உண்மையான புகைப்படத்தில் எடிட் செய்து ராகுல் காந்திக்கு அதிக தாடி மற்றும் தலை முடி இருப்பது போல மாற்றிப் பரப்புகின்றனர். 

ஆந்திர காங்கிரசின் டிவீட்-யில் ராகுல் காந்தி ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து எனப் பதிவிட்ட பேட்ஜ் அணிந்து பாரத் ஜோடோ யாத்திரையில் பயணிக்கிறார் எனப் பதிவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நீண்ட காலமாகச் சிறப்பு அந்தஸ்து கோரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கோரிக்கையினை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தியும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதே போல இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்தும், ராகுல் காந்தி குறித்தும் பல வதந்திகளை பாஜக மற்றும் வலதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : தங்கை மகளுடன் இருக்கும் ராகுலின் படத்தை தவறாகப் பரப்பிய பாஜகவினர்.. பதிவை நீக்கிய நிர்மல் குமார் !

மேலும் படிக்க : ராகுலுடன் இளம்பெண் எடுத்துக் கொண்ட பழைய படத்தை ஆபாசமாகப் பரப்பும் பாஜக ஆதரவாளர்கள்

ராகுல் காந்தியின் தாடியை மார்ஃபிங் செய்து பரப்பும் பாஜவினர் கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தனது தாடியினை நீளமாக வளர்த்ததை கொண்டாடினர். அவரது தாடி குறித்து பாஜகவின் தலைவர் அண்ணாமலை விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார். 

“கொரோனா காலத்தில் அவரது வலியினை காண்பிக்கவே தாடியை வளர்த்துள்ளார். அவரது தாடியின் மூலமாக ஒரு செய்தியினை தெரிவிக்கிறார். ஒவ்வொரு இந்தியனும் கொரோனா காலத்தில் அனுபவிக்கும் வலியினை நானும் அனுபவிக்கிறேன் என்பதற்காகவே அந்த தாடி” என அவர் பேசி இருந்தார். 

முடிவு :

நம் தேடலில், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ஆந்திராவில் எடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் புகைப்படத்தில் தாடி மற்றும் தலைமுடியை அதிகமாக இருப்பது போன்று எடிட் செய்து பாஜகவினர் பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader