இந்திய ஒற்றுமை யாத்திரையில் சர்ச், மசூதிக்கு போன ராகுல் காந்தி இந்துக் கோவிலுக்கு போகவில்லை என வதந்தி

பரவிய செய்தி

இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே கோவில்களின் நகரமாகத் திகழ்வது தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில்தான் அதிகப்படியாக 79,154 கோவில்கள் உள்ளன. இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி ஒரு இந்து கோவிலைக் கூட பார்வையிடவில்லை. ஆனால், சர்ச் மற்றும் மசூதிகளைப் பார்வையிடுகிறார்.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

இந்திய ஒற்றுமை யாத்திரையினை ராகுல் காந்தி கன்னியாகுமரியில்இருந்து செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3570 கிலோமீட்டர் தொலைவினை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை குறித்து பாஜக-வின் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் பல பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

பாஜகவை சேர்ந்த பிரித்தி காந்தி கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான கோவில்கள் உள்ளன. ஆனால், ராகுல் காந்தி ஒரு கோவிலை கூட பார்வையிடவில்லை. மாறாக, பல சர்சுகளையும், மசூதிகளையும் பார்வையிடுகிறார் என குறிப்பிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?

இந்திய ஒற்றுமை யாத்திரைக்கான தொடக்க விழா கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. அதற்கு அடுத்த நாளான 8ம் தேதி நடைபயணம் தொடங்கியது. தமிழகத்தை தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி கேரளா எல்லையில் யாத்திரை தொடர்ந்தது. 

இந்த யாத்திரை குறித்தான திட்ட பட்டியலினை காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான டிவிட்டர் பக்கத்திலும் பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இணையதளத்திலும் பதிவிட்டுள்ளனர். இத்திட்ட அறிக்கையில் ராகுல் காந்தி எந்த தேவாலயத்தையோ, மசூதியையோ பார்வையிடுவதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரியை பார்வையிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் யாத்திரையின் இறுதியில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தங்கியுள்ளார்.  

மேலும், யாத்திரையின் போது ராகுல் காந்தி சர்ச் அல்லது மசூதியினை பார்வையிட்டாரா என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இனியன் ராபர்டிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, ” பிரித்தி காந்தியின் குற்றச்சாட்டினை அவர் மறுத்தார். அது மட்டுமின்றி, ராகுல் காந்தி விவேகானந்தர் நினைவு இடத்தில் மரியாதை செலுத்திய பிறகே யாத்திரையை தொடங்கியுள்ளார் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் யாத்திரையின் போது எந்த ஒரு இடத்திலும் அவர் தேவாலயத்தையோ, மசூதியையோ பார்வையிடவில்லை. அவை தொண்டர்களை பார்வையிடும் ஒரு இடமாகவே (checkpoint) இருந்தன என கூறினார். 

மேலும் விரிவான தகவலுக்காக காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்பத்தூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் செல்வ பெருந்தகையினை தொடர்புகொண்டு பேசிய போது, ” ராகுல் காந்தி யாத்திரையின் போது ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தங்கினார். ஆனால் அக்கல்லூரி வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தேவாலயத்திற்கு கூட செல்லவில்லை. யாத்திரையில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேரவன்களை கல்லூரி மைதானத்தில் நிறுத்துவதற்கும் காங்கிரஸ் கட்சி பணம் செலுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந்துக்களில் முக்கிய தலைவராக இருக்ககூடிய விவேகானந்தருக்கு செலுத்த வேண்டிய மரியாதையினை முறையாக செலுத்தியே யாத்திரையினை தொடங்கியுள்ளார். பிரித்தி காந்தி குறிப்பிடுவது போல ராகுல் காந்தி மசூதிக்கும், சர்ச்சுக்கும் சென்றிந்தால் அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாமே. பாஜகவினர் தொடர்ந்து இம்மாதிரியான விஷக்கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் ” எனத் தெரிவித்தார். 

இதுமட்டுமின்றி, இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது செப்டம்பர் 14ம் தேதி கேரளாவிலுள்ள பிரபலமான சிவகிரி மட் என்ற மடத்திற்கு ராகுல் காந்தி  சென்றுள்ளார். இதனை வைத்து பார்க்கையில் ராகுல் காந்தியை இந்து மதத்திற்கு எதிரானவர் என்பது போன்ற கருத்தினை பரப்பவே பிரித்தி காந்தி இவ்வாறான பதிவுகளை பகிர்வதாக தோன்றுகிறது.

முடிவு :

நம் தேடலில், ராகுல் காந்தி தனது யாத்திரையின் போது சர்ச் மற்றும் மசூதிக்கு செல்கிறார். ஆனால் இந்து கோவில்களுக்கு செல்லவில்லை என பிரித்தி காந்தி குறிப்பிடுவது உண்மையல்ல என தெரிய வருகிறது. அவர் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரியில் மட்டுமே தங்கினார், யாத்திரையின் தொடக்க நாளில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தினார் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader