2001ல் அமெரிக்காவில் ராகுல் காந்தி போதைப்பொருள் வைத்திருந்ததால் கைது எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
அன்றைக்கே அமெரிக்காவில் கம்பி என்ன விட்டிருந்தால் .. உலகம் உண்மையை என்றோ உணர்ந்திருக்கும் ..
மதிப்பீடு
விளக்கம்
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பாஸ்டன் விமானநிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதாகக் கூறும் The Boston Globe என்ற செய்தித்தாளின் புகைப்படம் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் ராகுல் காந்தி போதைப்பொருளுக்காக பாஸ்டனில் கைது செய்யப்பட்டபோது, சோனியா கெஞ்சியதன் பேரில் பெரிய மனதுடன் வாஜ்பாய் அமெரிக்க அதிகாரிகளிடம் பேசினார் என்றும், இப்போது அத்தகைய இழிவான ஒருவர் பிரதமராக விரும்புகிறார் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தித்தாளில், “ஒரு இந்திய அரசியல்வாதி பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி அவரிடம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் இருப்பதைக் கண்டறிந்தனர். எங்கள் ஆதாரங்களின்படி, அவர் முன்னாள் இந்தியப் பிரதமரின் மகன். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரின் தலையீட்டின் பேரில் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று AFP தெரிவித்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
2001 செப்டம்பர் 30 தேதியிட்ட செய்தித்தாளின் ஒரு பகுதியைக் காட்டும் புகைப்படத்தை ஆய்வு செய்து பார்க்கையில், அந்தப் புகைப்படம் ஆன்லைன் செய்தித்தாள் கிளிப்பிங் ஜெனரேட்டர் இணையதளமான fodey.com ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கு சான்றாக ‘fodey.com’ இணையதளத்தில் நம் யூடர்ன் தரப்பில் உள்ளீடுகள் கொடுத்து உருவாக்கப்பட்ட போலி செய்தித்தாளின் புகைப்படத்தைக் கீழே காணலாம்.
மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ AFP Forum இணையதளத்தில் தேடுகையில், ராகுல் காந்தியின் இந்த செய்தித் தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது உறுதியானது.
மேலும் படிக்க: தடுப்பூசி செலுத்திய மணமகன் தேவை என பெண் வீட்டார் விளம்பரமா ?
இதற்கு முன்பாக, ‘fodey.com’ இணையதளத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலிச் செய்தி குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க: 2ஜி வழக்கில் ஆ.ராசா முக்கிய குற்றவாளி.. 2011 செய்தியை புதிதுபோல் வெளியிட்ட ஊடகங்கள் – பின்னணி என்ன ?
மேலும் படிக்க: பிரதமர் மோடியை காணவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸில் விளம்பரம் வெளியானதா ?
முடிவு:
நம் தேடலில், 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பாஸ்டன் விமானநிலையத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதாகப் பரப்பப்படும் செய்தித்தாள் போலியானது என்று அறிய முடிகிறது.
ஆதாரம்
ஆன்லைன் செய்தித்தாள் கிளிப்பிங் ஜெனரேட்டர்: