ராகுல் காந்தி பூணூலைக் காட்டி கவுல் பிராமணன் எனக் கூறியதாக சீமான் சொன்ன பொய் !

பரவிய செய்தி
“அவர்கள் (பாஜக) ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார்கள். இவர்கள் (காங்கிரஸ்) அதற்கு வாழ்த்து சொல்வார்கள். ஆர்.எஸ்.எஸ். என்பது பிராமணர்களின் கூடாரம் என கூறுவீர்கள். நீங்களே (ராகுல் காந்தி) உங்களது பூணூலினை எடுத்து நானும் கவுல் பிராமணன் தான் என காண்பிப்பீர்கள்.” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தலைமையில் மணிப்பூர் சம்பவம் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த ஜூலை 30 அன்று நடைபெற்றது. அதில் பேசிய சீமான் ‘இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் சேர்ந்தவர்கள் சாத்தானின் குழந்தைகளா மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நாட்டில் நடந்திருக்கிற அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியது அவர்கள் தான்’ என்று கூறியது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் ௦2) செய்தியாளர் சந்திப்பின் போது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து தவறாக பேசியதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் சீமானுடன் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு பதிலளித்து பேசிய சீமான், “பாஜக ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறது. ராகுல் காந்தி அதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் பிராமணர்களின் கூடாரம் எனக் கூறுவார்கள். பின்னர் தானும் (ராகுல்) கவுல் பிராமணன் தான் என பூணுலினை எடுத்து காட்டுகிறார். சிஏஏ, என்ஐஏ, என்எஸ்ஏ கொண்டு வந்தது யாரு? காங்கிரஸ். கையெழுத்து போட்டு கூட நின்றது யாரு திமுக தான.” என ராகுல் காந்தியை பற்றி விமர்சித்து பேசியுள்ளார்.
அவர் பேசியவை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
ராகுல்காந்தி தன்னை கவுல் பிராமணர் என கூறிக் கொண்டார் என சீமான் பேசியது தொடர்பாக இணையத்தில் தேடினோம். 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இது தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தி நேரடியாக தன்னை கவுல் பிராமணர் என கூறியதாக அந்த செய்திகளில் இடம் பெறவில்லை.
இது குறித்து இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியில், ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலுக்கு ராகுல் காந்தி கடந்த 2018, நவம்பர் 26 அன்று சென்ற போது சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது, கோயிலின் பூசாரி, பூஜையின்போது சொல்வதற்காக ராகுலின் கோத்திரம் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு ராகுல், ‘‘நான் காஷ்மீர் மாநிலத்தின் கவுல் எனப்படும் பிராமண சாதியைச் சேர்ந்தவன். எனது கோத்திரம் தத்தாத்ரேய கோத்திரம்’’என்று கூறியதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று ராகுல் காந்தி தான் பூணூல் அணிந்துள்ளதைக் பொது இடத்தில் காட்டுவதாக ஒரு புகைப்படம் கடந்த 2017ல் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்த நிலையில், தற்போது சீமானும் ராகுல் காந்தி பூணூலைக் காட்டி பிராமணன் எனக் கூறியதாகக் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த 2017 ஜனவரி 16 அன்று ராகுல்காந்தி ரிஷிகேஷில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு வெளியே வரும்பொது, தன்னுடைய குர்தா கிழிந்திருப்பதை காட்டிய வீடியோவை ABP NEWS-இன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் காண முடிந்தது.
அந்த வீடியோவில், மேடையில் பேசிக் கொண்டிருந்த ராகுல் “ஏழைகள் குறித்து பேசும் திரு மோடி அவர்கள் இவ்வாறு உடை அணிந்து நான் பார்த்ததில்லை, ஆனால் என்னைப் பாருங்கள் மிகவும் எளிமையாக கிழிந்த ஆடைகளைக் கூட அணிந்துக் கொள்கிறேன்” என்று மேடையில் பேசியவாறே தன்னுடைய குர்தா கிழிந்திருப்பதைக் காட்டுவதை அதில் பார்க்க முடிந்தது.
எனவே அந்த வீடியோவில் உள்ள புகைப்படத்தை எடிட் செய்து, அவர் பூணூல் அணிந்திருப்பதைக் காட்டுவதாக சமூக ஊடகங்களில் தவறாக பரப்பி வந்துள்ளனர். இதன் உண்மைத் தன்மையை அறியாமல் சீமானும் தவறாகப் பேசியுள்ளார்.
இதே போன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார் என்று சீமான் கூறியது தொடர்பாக தேடினோம். ராகுல் காந்தி கடந்த 2020 ஆகஸ்ட் ௦5 அன்று இது குறித்து பதிவு செய்த ட்வீட்டை அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டேர் பக்கத்தில் காண முடிந்தது.
அதில் “ராமன் என்றால் அன்பு, அவன் ஒருபோதும் வெறுப்பில் தோன்ற முடியாது. ராமர் இரக்க குணம் கொண்டவர், அவர் ஒருபோதும் கொடுமையில் தோன்ற முடியாது. ராமர் என்றால் நீதி, அவர் ஒருபோதும் அநீதியில் தோன்ற முடியாது, ”என்று பதிவிட்டு இது குறித்த ஒரு பாடலையும் அதில் குறிப்பிட்டிருப்பதையே காண முடிந்தது.
मर्यादा पुरुषोत्तम भगवान राम सर्वोत्तम मानवीय गुणों का स्वरूप हैं। वे हमारे मन की गहराइयों में बसी मानवता की मूल भावना हैं।
राम प्रेम हैं
वे कभी घृणा में प्रकट नहीं हो सकतेराम करुणा हैं
वे कभी क्रूरता में प्रकट नहीं हो सकतेराम न्याय हैं
वे कभी अन्याय में प्रकट नहीं हो सकते।— Rahul Gandhi (@RahulGandhi) August 5, 2020
மேலும், சிஏஏ, என்ஐஏ, என்எஸ்ஏ சட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் தான் எனப் பேசியுள்ளார். இதற்கு முன்பே எதிர்கட்சிகள் சிஏஏ சட்டத்திற்கு எதிராக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்களித்தது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: சிஏஏ, என்ஐஏ சட்ட மசோதா வந்தபோது திமுக வெளிநடப்பு செய்ததா ?
சிஏஏ சட்டத்திற்காக பாஜக, அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாகவே 311 வாக்குகளை மக்களவையிலும், 125 வாக்குகளை மாநிலங்களவையிலும் பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்து ஒன்றிய பாஜக அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மணிப்பூரில் 13 வயது பெண்ணை முதுகில் சுட்டுக் கொன்றதாக மியான்மர் படத்தை காண்பித்து பேசிய சீமான் !
முடிவு:
நம் தேடலில், ராகுல் காந்தி பூணூலைக் காட்டி தான் ஒரு கவுல் பிராமணன் எனக் கூறியதாகவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு இவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் சீமான் பேசிய தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
மேலும் சிஏஏ மசோதாவிற்கு காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் எதிராக வாக்களித்து உள்ளனர். அதற்கு ஆதரவாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் வாக்களித்ததாலேயே அவை சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.