2013ல் காங்கிரசின் தகுதி நீக்க மசோதாவை ராகுல் காந்தி கிழித்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி
2013ல் உச்சநீதிமன்றம் லில்லி தாமஸ் Vs மத்திய அரசு இடையிலான வழக்கில் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால் MP அல்லது MLA உடனடியாக தகுதி இழப்பு என்று தீர்ப்பு வழங்கியது. அதை மாற்ற சட்டம் கொண்டு வர முனைந்தது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு!! அந்த மசோதாவை கிழித்து எறிந்தார்.
மதிப்பீடு
விளக்கம்
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பேசிவிட்டார் எனக் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்தது. மேற்கொண்டு ஜாமீன் கோரியதையடுத்து 30 நாட்கள் ஜாமீனும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் லில்லி தாமஸ் வழக்கில் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்தீர்ப்புக்கு எதிராக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு சட்டம் கொண்டு வர முனைந்தது. அம்மசோதாவை ராகுல் காந்தி கிழித்து எறிந்தார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
லில்லி தாமஸ் வழக்கு :
நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் குற்ற வழக்கில் தண்டனை பெற்றால், அவர்களின் உறுப்பினர் பதவி பறிக்கப்படுவது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர், பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள், பலாத்காரம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றம், மக்களிடையே மத வேற்றுமையைத் தூண்டி கலவரம் ஏற்படுத்துவது முதலான காரணங்களுக்காக ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8 உட்பிரிவு 1, 2 மற்றும் 3 ஆகியவை குறிப்பிடுகின்றன.
குற்றத்திற்கான தண்டனை பெற்றவர் பதவி இழப்பதோடு, தண்டனை முடிந்த அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதே சட்டத்தில் 8 (4) பிரிவில், தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்தால் பதவி இழக்க மாட்டார் என்ற விதியும் உள்ளது. இப்பிரிவு இந்திய அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் லில்லி தாமஸ் மற்றும் எஸ்.என்.சுக்லா என்பவர்கள் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு ஜூலை மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (4)வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அச்சட்டப் பிரிவு செல்லாது எனக் கூறப்பட்டது.
ராகுல் காந்தி எதிர்ப்பு :
லில்லி தாமஸ் வழக்கு தொடர்பான தீர்ப்பினை எதிர்த்து அன்றைய காங்கிரஸ் அரசு மசோதா ஒன்றினை கொண்டு வந்தது. அம்மசோதா குறித்து ராகுல் காந்தி பேசிய வீடியோ ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 2013, செப்டம்பர் 27ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
அதில், தகுதி நீக்கம் தொடர்பான இந்த மசோதா முட்டாள்தனமானது. என்னைப் பொறுத்தவரையில் இம்மசோதா கிழித்து எறிய வேண்டியது. இது எனது கருத்து. இது எனது தனிப்பட்ட கருத்து. நான் மீண்டும் கூறுகிறேன். எனது தனிப்பட்ட கருத்து. இம்மசோதா கிழித்து எறியப்பட வேண்டியது” எனக் கூறியுள்ளார்.
ஆனால், அவர் எந்த மசோதாவினையும் கிழிக்கவில்லை. ராகுல் காந்தி பேசியது தொடர்பாக ‘Mint‘ போன்ற செய்திகளிலும் அவர் மசோதாவைக் கிழித்ததாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இச்செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக Times Now, NDTV போன்ற தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியிலும் ராகுல் காந்தி அம்மசோதாவினை கிழிப்பதாக எந்த வீடியோ பதிவுகளும் இல்லை.
சமூக வலைத்தளங்களில் ராகுல் காந்தி மசோதாவினை கிழித்ததாகப் பரவும் புகைப்படத்தை கூகுலில் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘NDTV’ யூடியூப் பக்கத்தில் ‘In dramatic flourish, Rahul Gandhi rips up paper at rally’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை பதிவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு அளிப்பதாகக் குற்றம் சாட்டி காகிதம் ஒன்றினை ராகுல் காந்தி கிழித்து எறிந்துள்ளார். இது குறித்து ‘இந்தியா டுடே’ இணையதளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தினை 2013ம் ஆண்டு ராகுல் காந்தி சொன்ன கருத்துடன் சேர்த்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ராகுல் காந்தி தங்கை பிரியங்காவிற்கு முத்தமிட்ட படத்தை மார்பிங் செய்து பரப்பும் வலதுசாரிகள் !
ராகுல் காந்தி குறித்துப் பரப்பப்பட்ட போலிச் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் யாத்திரைக்கு வருபவர்களுக்கு பணம் வழங்குவதாக பாஜகவினர் பரப்பும் பழைய வீடியோ
முடிவு :
நம் தேடலில், 2013ம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மசோதாவினை ராகுல் காந்தி கிழித்து எறிந்ததாகப் பரவும் புகைப்படம் உண்மை அல்ல. அம்மசோதா கிழித்து எறியப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றே அவர் கூறியுள்ளார். ஆனால், கிழித்து எறியவில்லை என்பதை அறிய முடிகிறது.