ராகுல் காந்தி ” Raul Vinci ” என்ற பெயரில் கல்லூரி படிப்பை படித்தாரா ?

பரவிய செய்தி
ராகுல் காந்தி தன் கல்லூரி படிப்பை ” Raul Vinci ” எனும் பெயரில் படித்து உள்ளார் மற்றும் National Economy Planning & Policy பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.
மதிப்பீடு
சுருக்கம்
ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ்-ல் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் வேறொரு புனைப் பெயர் இணைக்கப்பட்டு பட்டம் படித்தார் என்பது உண்மையே.
ஆனால், ராகுல் காந்திக்கு கல்லூரியில் வழங்கிய சான்றிதழ் என பரவுவதில் பல்வேறு தவறுகள் உள்ளன.
விளக்கம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் Mphil படிப்பு குறித்த பதிவுகள் கேள்விகளை எழுப்பி உள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த ராகுல் காந்தி தன் பெயரை ” Raul Vinci ” என வைத்துக் கொண்டதாகவும், ஒரு பாடப் பிரிவில் குறைந்தப்பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பை பெற்றுள்ளதாக கல்லூரி சான்றிதழ் ஒன்று பரப்பப்படுகிறது.
ராகுல் காந்தி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்ற சான்றிதழ் என பரவும் படத்தில் 2004-2005 ஆம் ஆண்டில் பயின்றதாக குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், ராகுல் காந்தி தன் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கேம்பிரிட்ஜ்-ன் ட்ரினிட்டி கல்லூரியில் Mphil படிப்பை 1995 ஆம் ஆண்டுகளில் முடித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், இதனை ராகுல் காந்தியின் கல்லூரி சான்றிதழ் எனக் கூறியும், ராகுல் காந்தி போலியான பட்டத்தை காண்பித்து வருவதாக பிஜேபி கட்சியின் சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாற்றி இருந்தார்.
ஒருமுறை டைம்ஸ் நவ் பத்திரிகையின் ஆசிரியர் அர்னாப், ராகுல் காந்தி உடனான பேட்டியில் அவரின் Mphil பட்டம் குறித்த கேள்விகளை எழுப்பினார். அதில், பிஜேபி தலைவர் சுப்பிரமணிய சுவாமி ராகுல் காந்தியின் கேம்பிரிட்ஜ் Mphil பட்டம் பொய்யானது என வாதிடுவதாக பேசி இருந்தார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி ” நீங்கள் என் பட்டத்தை பார்க்க விரும்பினால், நான் அதை காண்பிக்க தயார். என் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பட்டம் பெற்றதாக கூறுவதையும் அவர் பார்க்கலாம். அவை தவறு என்றால் சுவாமி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் ” எனக் கூறி இருந்தார்.
எனினும், ராகுல் காந்தி, ” Raul Vinci “, Rahul Vinci ஆகிய எந்த பெயரில் தன் கல்லூரி படிப்பை பயின்றார் என்ற கேள்விக்கு பதில் குழப்பமாக இருந்துள்ளது. சமீபத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அலிசொன் ரிச்சர்ட், ” உண்மையில் ராகுல் காந்திக்கு 1995 கீழ் Development Studies இல் Mphil பட்டம் ” Raul Vinci ” என்ற பெயரில் வழங்கப்பட்டதாக ” தன் கடிதத்தின் வழியாக தெரிவித்து இருப்பதாக இந்தியா டுடே பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ்-ல் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் 1995-ல் Mphil படிப்பை முடித்துள்ளார். அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர். 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, ராகுலின் பாதுகாப்பு காரணமாக அப்பெயரில் படிக்க வைத்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் தகவல் பட்டியலில் ” VINCI Rahul T MPHIL95 ” என ராகுல் காந்தியை குறிப்பிட்டு உள்ளனர் என The Telegraph வெளியிட்டு இருந்தது. அதில் T கல்லூரியின் பெயராகும். ” Raul ” அல்லது ” Rahul ” என எந்த பெயரில் தன் Mphil பட்டத்தை முடித்தார் என்ற குழப்பம் ராகுல் காந்தி தானாக முன்வந்து தன் பட்டத்தை காண்பித்தால் மட்டுமே தீர வாய்ப்புள்ளது.