செய்தியாளர் சந்திப்பில் போஸ்டரை திருப்ப சொன்னால் தானே திரும்பினாரா ராகுல் காந்தி ?

பரவிய செய்தி

ராகுல் காந்தியின் கையிலுள்ள புத்தகத்தின் பின் பகுதியை காண்பிக்க செய்தியாளர் கேட்டதற்கு, அவர் திரும்பி நின்று தனது பின் பக்கத்தைக் காண்பித்து இருக்கிறார்.

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல்காந்தி ஒரு புத்தகத்தினை வெளியிடுகிறார். அப்போது செய்தியாளர்கள் அப்புத்தகத்தின் பின் பக்கத்தைக் காண்பிக்க சொன்ன போது, அதற்கு ராகுல் காந்தி திரும்பி நின்று தனது பின் பக்கத்தைக் காண்பிப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் செய்யப்படுகிறது. 

உண்மை என்ன ?

ராகுல் காந்தி குறித்து வைரல் செய்யப்படும் வீடியோவின் பாதியில், அவர் பேசுவது நிறுத்தப்பட்டு மியூசிக் கொடுத்து எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பற்றி இணையத்தில் தேடியதில் அது 2021, ஜனவரி 19ம் தேதியன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு என்பதை அறிய முடிந்தது. 

இச்செய்தியாளர் சந்திப்பின் முழு வீடியோ இந்தியத் தேசிய காங்கிரஸின் அதிகாரப் பூர்வமான யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் புதிய வேளாண் சட்டம் குறித்து காங்கிரசின் அறிக்கை சிறிய புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியத் தேசிய காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான யூடியூப் பக்கத்திலுள்ள வீடியோவின் இரண்டாவது நிமிடத்தில் இந்த காட்சியினை காண முடிகிறது.

புத்தகம் வெளியிடும்போது அதனைப் புகைப்படம் எடுக்க ஏதுவாக செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி காண்பிக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, பார்த்தீர்களா நாங்கள் எவ்வளவு fair-ஆன ஆட்கள். புத்தகத்தை எல்லா பக்கமும் காண்பிக்கின்றோம். இதே பாஜக-வாக இருந்தால் இப்படிதான் காட்டி இருப்பார்கள் என திரும்பி நின்று முதுகை காண்பிக்கிறார்.

ஆனால், செய்தியாளர் புத்தகத்தின் பின்பக்கத்தைக் காண்பிக்கச் சொன்னதாகவும், அதற்கு ராகுல் காந்தியோ திரும்பி நின்று தனது பின் பக்கத்தைக் காண்பித்ததாகவும் வீடியோவினை எடிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

மேலும் படிக்க : ராகுல் காந்தி கோதுமை அளவை லிட்டரில் கூறியதாக பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

இதே போன்று ராகுல் காந்தி கோதுமையின் அளவினை லிட்டரில் கூறியதாக எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டது. அந்த மேடையில்  தொடர்ந்து லிட்டர் சார்ந்த பொருட்களின் விலை பற்றிப் பேசிய பிறகு கோதுமையின் அளவையும் லிட்டர் எனக் குறிப்பிட்டுவிட்டார். கோதுமை அளவை லிட்டர் எனத் தவறாகக் கூறியதை உணர்ந்து உடனே கிலோ கிராம் எனத் திருத்திக் கூறி இருக்கிறார். இதனையும் தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடிட் செய்யப்பட்டுப் பரப்பப்பட்டது. 

முடிவு :

நம் தேடலில், புத்தகத்தின் பின் பகுதியைக் காண்பிக்கச் சொன்னால், ராகுல் காந்தி திரும்பி நின்று தனது பின் பக்கத்தைக் காண்பித்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader