ராகுல் காந்தியின் பேச்சில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை வைத்து பல பொய்களைப் பரப்பும் Poli Talk’s !

பரவிய செய்தி
உருளைக் கிழங்கைத் தங்கமாக மாற்றும் இயந்திரத்தைக் கண்டுப்பிடித்து தருவேன். விவசாயிகளுக்கு நிலவில் இடம் தருவேன். அங்கு உருளைக் கிழங்கை விளைய வைப்போம் – ராகுல் காந்தி
மதிப்பீடு
விளக்கம்
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பேசியதாகக் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்தது. மேற்கொண்டு ஜாமீன் கோரியதையடுத்து 30 நாட்கள் ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தி பேசியதாக சில வீடியோக்களை தொகுத்து PoliTalk’s என்னும் யூடியூப் பக்கம் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், உருளைக் கிழங்கைத் தங்கமாக மாற்றும் இயந்திரத்தைக் கண்டுப்பிடித்து ஏழைகளின் வறுமையைப் போக்கப் போவதாகவும், விவசாயிகளுக்கு நிலவில் இடம் தருவேன். அங்கு உருளைக் கிழங்கை விளைய வைப்போம். அதனைக் குஜராத்தில் விற்பனை செய்வோம் என ராகுல் காந்தி பேசியதாகவும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
உண்மை என்ன ?
ராகுல் காந்தி உருளைக் கிழங்கு குறித்துப் பேசிய கீவேர்டுகளை கொண்டு இணையத்தில் தேடினோம். ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 2017ம் ஆண்டு குஜராத் தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி பேசிய வீடியோ கிடைத்தது.
அவ்வீடியோவின் நிலைத்தகவலில் குஜராத் மாநிலம் பதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மேடையில் குஜராத் விவசாயிகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி ராகுல் காந்தி குறிப்பிடுகிறார். மேலும், குஜராத் மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் அரசின் அக்கறையின்மை குறித்தும் கூறுகிறார்.
மேலும், பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவர் விமர்சித்துள்ளார். உருளைக் கிழங்கு குறித்து ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் பகுதி, வீடியோவின் 17:50வது நிமிடத்தில் உள்ளது.
‘உருளைக் கிழங்கை ஒருபுறம் செலுத்தினால் மற்றொரு பக்கத்தில் தங்கமாக வெளிவருவது போன்ற இயந்திரத்தை நிறுவுவேன் என உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் அவர் (மோடி) கூறினார். இது என் வார்த்தைகள் அல்ல, நரேந்திர மோடியின் வார்த்தைகள்’ என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அதீத கற்பனை வாக்குறுதிகளை மக்களிடம் மோடி அளித்தார் என்பதைக் குறிப்பிடும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இதனை எடிட் செய்து ராகுல் காந்தி கூறுவது போல் பரப்பி உள்ளனர்.
அடுத்ததாக, விவசாயிகளுக்கு ராகுல் காந்தி நிலாவில் நிலம் தருவதாகப் பேசிய வீடியோவும், அதே பாட்னா வீடியோவின் 19வது நிமிடத்திற்கு மேல் உள்ளது.
அதில் அவர், ‘மோடி ஜி சொல்கிறார்.. நீங்கள் இங்கு விவசாயம் செய்து பணம் சம்பாதிக்க முடியாது. அங்கே நிலவு இருக்கிறது. அதில் உங்களுக்கு விவசாய நிலங்களைத் தருகிறேன். எதிர்காலத்தில் நீங்கள் அங்கு உருளைக் கிழங்கு பயிரிடுங்கள். அங்கு ஒரு இயந்திரத்தை வைத்து அந்த உருளைக் கிழங்கை மீண்டும் குஜராத்திற்குக் கொண்டு வருவோம்’ எனக் கூறுகிறார்.
இத்தகைய கற்பனை அறிக்கைகளைத்தான் மோடி கூறுகிறார் என ராகுல் காந்தி கிண்டலாகப் பேசியதை எடிட் செய்து, அவருடையக் கருத்துப் போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
முன்னதாக ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் போது பல போலிச் செய்திகள் பாஜக மற்றும் வலதுசாரிகளால் பரப்பப்பட்டன. அதன் உண்மைத் தன்மைக் குறித்தும், ‘போலி டாக்ஸ்’ வெளியிட்ட போலிச் செய்திகள் குறித்தும் ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : போலிச் செய்தி வெளியிட்ட Poli Talk.. மனு தர்ம சாஸ்திரத்தில் சூத்திரர்கள் வே..மகன் எனக் கூறவில்லையா ?
முடிவு :
நம் தேடலில், உருளைக் கிழங்கைத் தங்கமாக மாற்றும் இயந்திரம் குறித்தும், நிலவில் விவசாயிகளுக்கு நிலம் தருவேன் என்றும் ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பிரதமர் மோடி இத்தகைய கற்பனை அறிக்கைகளையே அளிப்பதாகக் கேலி செய்ததின் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்துப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.